குர்மீத் ராம் ரஹிமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்துக்கு கைது வாரண்ட் பிறப்பித்த போலீசார், அவரை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், ஹரியானாவில் வன்முறை வெடித்தது.
அந்த வன்முறையில் 38 வரை உயிரிழந்த நிலையில், வன்முறையை தூண்டுவிட்டு, குர்மீத்தை தப்ப வைக்க அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் திட்டமிட்டது அம்பலமானது.
இதையடுத்து, அவர் நேபாளம் தப்பியதாக கூறப்பட்ட நிலையில், அங்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஹனிபிரீத்தை கைது செய்ய முடியாமல் திரும்பி வந்தனர்.
டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் ஹனிபிரீத் தங்கியிருப்பதாகவும், முன் ஜாமீன் பெற முயற்சி நடைபெறுவதாகவும், ஹரியானா போலீசுக்கு தகவல் கிடைத்து இருந்தது. இதையடுத்து, கைது வாரண்ட் உடன் டெல்லி சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், அங்கும் ஹனிபிரீத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.
இந்நிலையில் ஏஎன்ஐ தகவலின் படி இன்று காலை தி பஞ்ச்குலா போலிஸ் கைது வாரண்ட் உடன் புதுடெல்லி கிரேட்டர் கைலாஷில் ஹனிபிரீத்தை கைது செய்ய ஒரு வீட்டைச் சோதனை மேற்கொண்டனர் ஆனால் ஹனிபிரீத்தை அங்கும் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.