சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரைவில் சிறை செல்வார்கள் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தமது 80-வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்., "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை பெறவும், பாகிஸ்தான் பிடியில் இருந்து காஷ்மீரை முழுமையாக கைப்பற்றவும் பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, திருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்ய செல்கிறேன்" என தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., "பொருளாதார மந்த நிலையை மாற்ற, மக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படவேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள், தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் சரி, தற்போது பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கும் பொருளாதாரம் தெரியாது. இவர்களால் சரிந்து உள்ள இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த நான்கு, ஐந்து மாதங்களில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்படும்.
Get ready to say good bye to ₹ 5 trillion if no new economic policy is forthcoming. Neither boldness alone or knowledge alone can save the economy from a crash. It needs both. Today we have neither
— Subramanian Swamy (@Swamy39) August 31, 2019
தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குறித்த கேள்விக்கு., திகார் சிறைக்கு செல்ல சிதம்பரம் பயப்படுகிறார். வீட்டுக்காவலில் வைக்க கெஞ்சுகிறார். அவர் மீது ஏழு ஊழல் வழக்குகள் உள்ளன. அவரது ஊழல் புகார்களுக்கு 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். அவரது மகனும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல், சோனியா, காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களின் முதல்வர்கள், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். திகார் சிறையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தும் நிலை உண்டாகும் என தெரிவித்தார்.
பின்னர் தமிழக பாஜக குறித்து பேசிய அவர்., தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும். தமிழகத்தில் பாஜக-வை வளர்க்க வேண்டுமானால் இது ஒன்றே வழி. ஐந்து தொகுதிகளுக்காக மற்ற கட்சிகளிடம் பிச்சை பெறும் நிலையை மாற்றவேண்டும். அப்போதுதான் கட்சி வளரும் என பகிரங்கமாக தனது கருத்துகளை பதிவு செய்தார்.