முன்னாள் வெளிவிவகார அமைச்சர், BJP மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அரசியல் பயணம்..!

சுஷ்மா சுவராஜ் தனது இளம் வயது முதல் இறுதி வரை அரசியலில் பல உச்சங்களை தொட்டு சாதித்தவர்!!

Last Updated : Aug 7, 2019, 09:03 AM IST
முன்னாள் வெளிவிவகார அமைச்சர், BJP மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அரசியல் பயணம்..! title=

சுஷ்மா சுவராஜ் தனது இளம் வயது முதல் இறுதி வரை அரசியலில் பல உச்சங்களை தொட்டு சாதித்தவர்!!

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்த சுஷ்மா சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார். தனது தந்தை ஆர்.எஸ்.எஸ்.சில் தீவிரமாக இருந்து வந்ததால், அவருக்கும் அந்த இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.

1970 ஆம் ஆண்டில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் சுஷ்மா. அம்பாலா கண்டோன்மெண்ட்டில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியில் படித்தபோது பேச்சுப் போட்டி, விவாதம், நாடகங்களில் பங்கேற்று கோப்பைகளை வென்றுள்ளார். சட்டப்படிப்பு படித்தபின், உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாகத் தேர்வுபெற்று, 25 வயதிலேயே அமைச்சராக நியமிக்கப்பட்டார். அரியானா மாநில ஜனதா தலைவராக இருந்த சுஷ்மா, பாஜக உருவானபின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை டெல்லி மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில், நாடாளுமன்ற விவகாரம், சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். தொடர்ந்து 7 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 15-வது மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த 2-வது பெண் என்ற பெருமையும் இவரையே சார்ந்ததாகும்.

வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்த போது, டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும், புகார்கள் மீதும், கோரிக்கைகள் மீதும், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பலரின் பாராட்டைப் பெற்றார். சமூக வலைத்தளங்களில் துடிப்புடன் இயங்கிய இவர் தனது டுவிட்டரில் கடைசியாக பதிவிட்டிருந்தது காஷ்மீர் விவகாரம் குறித்துதான். அந்தப் பதிவில், பிரதமர் மோடிக்கு நன்றி எனவும், இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இளம் வயதில் தொடங்கிய அரசியல் பணியை கடைசி நாள் வரை மேற்கொண்ட சுஷ்மாவின் மறைவு பாஜகவிற்கு நிச்சயமாக ஒரு பேரிழப்பு...

 

Trending News