+12 தேர்வுகளில் சாதிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்: அன்புமணி

12-ஆம் வகுப்பு தேர்வுகளில் சாதிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.     

Last Updated : Feb 28, 2019, 12:39 PM IST
+12 தேர்வுகளில் சாதிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்: அன்புமணி title=

12-ஆம் வகுப்பு தேர்வுகளில் சாதிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.     

அந்த அறிக்கையில், கூறியுள்ளதாவது; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை வெள்ளிக்கிழமைத் தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் 7,082 பள்ளிகளைச் சேர்ந்த 8,61,107 மாணவர்கள், 26,885 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87,992 பேர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் சாதிக்க உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மருத்துவம் தவிர்த்த மற்ற படிப்புகளில் சேருவதற்கான தகுதியை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தான் ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இம்முறை ஒரு தேர்வுக்கும், மற்றொரு தேர்வுக்கும் இடையே போதிய விடுமுறை வழங்கப்படவில்லை. தேர்தல் ஆண்டு என்பதால், முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு அட்டவணை தயாரிக்கப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்துத் தேர்வுகளையும் மாணவர்கள் சிறப்பாக எழுத வேண்டும்; அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

பொதுத்தேர்வுகளின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது  பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும். அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குத் தெரிந்த அனைவரும் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஊக்குவிக்க வேண்டும்.

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பும்  உயர்கல்வியில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும்; அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும், நாட்டுக்கு சேவை செய்யும் வகையிலும் அமைய வேண்டும் என்று கூறி மீண்டும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். 

 

Trending News