ரஃபேல் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி செத்த பாம்பை அடித்து கொண்டிருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பாதுகாப்புத்துறையின் பேச்சுவார்த்தையில் குறுக்கிட்டதாக எழுந்துள்ள புதிய சர்ச்சையை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி செத்த பாம்பை அடித்து கொண்டிருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை நடத்தி வந்த பேச்சுவார்த்தையை மீறி, பிரதமர் அலுவலகம் தனி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்புத்துறையில் இருந்து ஒரு அறிக்கை வெளியானதாகவும் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஏற்கனவே ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்கள் வெளியிட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற கமிட்டி ஒன்றை உருவாக்கி, இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சி செத்த பாம்பை அடித்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
#WATCH live from Delhi: Defence Minister Nirmala Sitharaman's interview to ANI #RafaleDeal #DMtoANI https://t.co/wriJa0PeeM
— ANI (@ANI) February 8, 2019
பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுபோன்ற ஒப்பந்தங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவது சகஜமான விஷயம் தான், என்று நிர்மலா சீதாராமன் கூறினார். "அந்த ஊடகம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து வெளியான அறிக்கையை மட்டுமே பதிவிட்டு உள்ளது. ஆனால், அதற்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கொடுத்த பதிலை பதிவிடவில்லை. அது எப்படி சரியான ஊடக நெறிமுறையாகும்," என கேள்வி எழுப்பினார். பிரதமர் அலுவலகம் ரஃபேல் விவகாரத்தில் குறுக்கிடுவதாக எழுந்த அறிக்கையை தொடர்ந்து, குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரியிடம், அமைச்சர் பாரிக்கர், "எல்லாமே சரியாக தான் நடந்து வருகிறது" என பதிலளித்து இருந்ததாக நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.