தெலுங்கனா அரசு விளம்பரத்தில் தனது கணவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் உபயோகித்ததால் கண்டனம்..! கண்ணீர் வடிக்கும் பெண்
தெலங்கானா அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசு விளம்பரத்தில் இடம் பெற்றிந்த பெண்ணுக்கு அருகில் அவரின் கணவனுக்குப் பதிலாக வேறு ஒருவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதற்கு அந்தப் பெண்ணின் குடும்பம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
தெலங்கானா அரசு சார்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. தெலங்கான அரசின், ரைது பீமா (விவசாயக் காப்பீடு திட்டம்) மற்றும் கண்டி வெலுகு (கண் ஆய்வு நிகழ்ச்சி) என்ற திட்டங்கள் குறித்து விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், பத்மா என்ற பெண், அவரின் குழந்தை மற்றும் கணவருடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில், பத்மாவின் கணவர் நாயாகுலா நாகராஜூக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதனால், பத்மாவின் குடும்பம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய பத்மா மற்றும் நாகராஜூ, 'நாங்கள், குடும்பத்துடன் விளம்பரத்துக்குப் புகைப்படம் கொடுத்தால், லோன் வாங்கித் தருவதாக சிலர் எங்களைத் தொடர்புகொண்டனர். திடீரென்று, நாளிதழ்களில் எங்களுடைய குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதுபோல விளம்பரங்கள் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். எங்களிடம் சொந்தமாக நிலம் கிடையாது.
நாங்கள் எப்படி, விவசாயக் காப்பீடு பெற முடியும். என்னுடைய கணவரைப் போல, வேறு ஒருத்தரின் புகைப்படத்தைப் போட்டது மிகவும் மோசமான ஒன்று. அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், எங்கள் குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்துள்ளனர். பலரும் எங்களைப் பார்த்துச் சிரிக்கின்றனர். எங்களால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர், 'பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தெரிவித்த தெலங்கானா மக்கள் தொடர்பு அதிகாரி, 'இந்த விவகாரம் தொடர்பாக விளம்பர நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.