புது தில்லி: தில்லித் தமிழக் கல்விக் கழக நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் தொடக்கவிழா புதன் கிழமை (பிப்ரவரி 22) தில்லியிலுள்ள இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகம், முன்னாள் மாணவர்கள் டிரஸ்ட், முன்னாள் மாணவர்கள் பேனியன் அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளாலும் சேர்ந்து நடத்தப்பட்டது.
ஒரு மாணவன் ஓர் ஆசிரியருடன் 1923 ஆம் ஆண்டு மதராஸி எஜூகேசன் அசோசியேசன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், இன்று தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்று மந்திர்மார்க், கரோல் பாக் பூசா சாலை, லோதி வளாகம், இலக்குமிபாய் நகர், மோதிபாக், இராமதிருஷ்ணபுரம், ஜனக்புரி என தில்லியின் ஏழு முக்கிய இடங்களில் ஏழு பள்ளிகளையும் 7000 மாணவர்களையும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. நூற்றாண்டு விழாக் காணும் இக்கல்விக் கழகம் மிகச் சிறப்பாகக் கல்விப் பணியாற்றி வருகின்றது. இப்பள்ளிகள் மொழிச் சிறுபான்மையினருக்குரிய பள்ளிகளாக அங்ககாரம் பெற்று தில்லி அரசின் மானியம் பெற்று மத்திய கல்வி வாரியத்தின்பாடத் திட்டங்களைக் கொண்டு இயங்கி வருகின்றன . கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலர் இராஜூ தலைமையில் இயங்கி வரும் இக்கல்விக் கழகம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வெளிவரும் அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இதனை மெய்ப்பிக்கின்றன. வருடம் தோறும் பல பொறியியல் வல்லுநர்களையும் அரசு அதிகாரிகளையும் பல ஆளுமைகளையும் இப் பள்ளிகள் உருவாக்கி வருகின்றன.
இவ்விழாவில் ஜனக்புரி பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்திய அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் சீனியர் தலைவரும், ஜம்மு காஸ்மீர் பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளருமான ஆவிஷ் சூத் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷ்யாம் சாஜூ, இராதா செளஹான் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் சூரிய நாராயணன், செயலர் இராஜூ, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பணி ஒய்வு பெற்ற தில்லித் தமிழ்க் கல்விக் கழக முதல்வர்கள், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஏழு பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஏழு பள்ளி ஆசிரியர்கள், ஏழு பள்ளி பெற்றோர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டசபை உறுப்பினரும் பிரபல சினிமா நடிகரும், AISMK அமைப்பின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான ஸ்ரீ.ஆர்.சரத்குமார் கலந்து கொண்டார். அவர் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் மிகப் பெரிய நிறுவனம் ஆகும். அது வருங்காலத்தில் உலகத் தரத்துக்கு உயரும். பல தடைகளைக் கடந்து இன்று இந்த அமைப்பு நூற்றாண்டு காண்கின்றது. மாணவர்கள் முதலில் பெற்றோர்களையும் பின் ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். ஏனென்றால், நல்ல ஆசிரியர் மாணவனை நெறிப்படுத்தி உருவாக்குகின்றார்கள். இன்று நான் தன்னம்பிக்கையோடு இந்த நிலையில் இருப்பதற்கு என் பள்ளி ஆசிரியர்களே காரணம். நாம் அனைவரும் இணைந்து ஜாதி, மத, இன, வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் சூரியநாராயணன் அவர்கள் வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது வரவேற்புரையில் நம் தமிழ்ப் பாரம்பரியத்தையும் கலையையும் பரப்ப அனைத்து முயற்சிகளையும் நிர்வாகம் எடுத்து வருகின்றது. கல்வியின் தரத்தை அதிகரிப்பதில் நிர்வாகம் முக்திய கவனம் செலுத்தி வருகின்றது என்றார்.
குத்து விளக்கேற்றி பாரம்பரிய முறைப்படி விழ தொடங்கப்பட்டது. விமாவில் தொடக்க நிகழ்வாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிறுவனரான ராவ் பகதூர் கோபால ஐயர் மற்றும் முதல் ஆசிரியரான PHS ஐயர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் தில்லித் தமிழ்க் கல்விக் கழக நினைவு மலர் மற்றும் நாட்காட்டி வெளியிடப்பட்டது. நினைவு மலரை சிறப்பு வருந்தினர் சரத்குமார் அவர்கள் வெளியிட தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் சூரிய நாராயணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் மாணவர்கள், ஓய்வு பெற்ற முதல்வர்கள், பள்ளிகளில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் ஆகியோர் விழாத் தலைவரால் கெளரவிக்கப்பட்டார்கள். 2020-21 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் ஏழு பள்ளிகளிலும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற சந்தியாவிற்கு 25,000 ரூபாய்க்கான காசோலையை இராதா வெங்கட்ரமணன் (முன்னாள் மாணவி) அவர்கள் வழங்கினார். தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிறுவனரான ராவ் பகதூர் கோபால ஐயர் அவர்களின் பேத்தி திருமதி சியாமளா அவர்கள் சிறப்பு விருந்தினர் சரத்குமார் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்கள். முதல் ஆசிரியரான பி.ஹெச். சுப்பிரமணிய ஐயரின் மகள் ஜானி அவர் தந்தையின் சார்பாக நினைவுப் பரிசை பெற்றுக் கொண்டார்.
விழாவில் பார்வையாளர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஏழு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஒயிலாட்டம், உழவராட்டம், கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் ஆகியவையும் பல்வேறு மாநிலங்கள் சார்ந்த நடனங்களும், தெருக்கூத்து ஆகியவையும் நடைபெற்றன. பரதநாட்டியம், கதக் நடனம், போன்ற நடனங்களும் இடம் பெற்றன.
நூற்றாண்டு விழாவின் முடிவில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி இயக்குநர் செல்வி சித்ரா இராதாகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ