பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: ISRO

தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது!!

Last Updated : Sep 7, 2019, 09:05 PM IST
பின்னடைவு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: ISRO title=

தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது!!

சுமார் 978 கோடி ரூபாய் செலவில் தயாரான சந்திரயான்-2, 3,850 கிலோ எடை கொண்டதாகும். நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் லேண்டர் விக்ரம் மற்றும் ஆய்வூர்தி பிரக்யான் ஆகிய 3 அங்கங்களை உள்ளடக்கியது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி, பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, அதன் சுற்றுப்பாதை நிலவுக்கு நெருக்கமாக அமையும் வகையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. செப்டம்பர் 2 ஆம் தேதி பகல் 12.45 மணியில் இருந்து 1.45 மணிக்குள் சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக, ஆய்வூர்தி பிரக்யானுடன் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இன்று அதிகாலை 1.40 மணிக்கு, 30 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபோது, லேண்டர் விக்ரம் சுற்றுவது நிறுத்தப்பட்டு, நிலவை நோக்கி தரையிறக்கும் பணி தொடங்கியது. சந்திராயன்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவின் அருகில் சென்றபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். மேலும், இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இஸ்ரோ இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரயான் 2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவீத பணிகளை எட்டிவிட்டோம். தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம். முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான்-2-யில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நிலவின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி ஆர்பிட்டர் சுற்றிக்கொண்டு வருகிறது. 

சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து அதன் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகள் உற்று நோக்கி கொண்டு இருந்தன. ஆர்பிட்டரில் உள்ள அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரும் பயனுள்ளதாக அமையும் என இஸ்ரோ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 

Trending News