புது டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்களை உள்ளடக்கிய வளாகமாகும்.
இந்திய ஜனநாயகத்தின் மையப்புள்ளியாக இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. சரித்திர மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடம் இந்தியாவின் ஒரு அடையாளமாக விளங்குகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு (Parliament) இன்னும் அதிக வசதிகளுடனும், அதிக அளவிலான அலுவலகங்களை உள்ளடக்கிய வகையிலும் ஒரு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட அப்போது 83 லட்சம் ரூபாய் செலவானது. இதில் சில பகுதிகள் சேதமடைந்தும், சில பகுதிகள் இன்னும் வலுவாகவும் உள்ளன.
ஆகையால், இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதன் அருகிலேயே 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா என்ற புதிய நாடாளுமன்ற கட்டிட திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன.
ALSO READ: 2022-க்குள் புதிய பாராளுமன்ற கட்டிடம்; மத்திய அரசு திட்டம்!
மிகப் பெரிய அளவில், அதிநவீன வசதிகளோடும், பாதுகாப்பு அம்சங்களோடும் கட்டப்படவுள்ள இந்த புதிய நாடாளும்னறக் கட்டிடத்தை கட்டி முடிக்க மொத்தமாக 971 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நாடு 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், அதற்குள் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டம் உள்ளது.
எனினும், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் (Coronavirus) மக்கள் அவதிக்கு ஆளாகியிருக்கும் இந்த வேளையில், சென்ட்ரல் விஸ்டாவின் கட்டுமான பணிகளில் அரசு ஈடுபடுவதும், அதற்காக பணத்தை செலவிடுவதும் வருத்தத்தை அளிப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் இந்த எண்ணம் பரவலாக உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகள், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் பிற உபகரணங்கள் என பலவற்றில் தட்டுப்பாடு உள்ள நிலையில், சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்துக்கு இத்தனை பெரிய தொகையை செலவிடுவது இப்போது நியாயமாகுமா என ஒரு சாரார் கருகிறார்கள்.
மேலும், சென்ட்ரல் விஸ்டா (Central Vista) கட்டுமான பணிகளுக்கு ஆட்கள் வெளி இடங்களிலிருந்து அழைத்து வரப்படுவதால், அவர்களாலும் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கோரி இதைத் தடை செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டா வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. தீர்ப்பை அளித்த நீதிபதிகள், சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்தனர். புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டிட கட்டுமான பணிகளுக்கு எந்த வித தடையையும் விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உறுதியாக கூறியது.
சென்ட்ரல் விஸ்டா கட்டுமானம் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அத்தியாவசிய பணி என தீதிமன்றம் கூறியுள்ளது. இதன் கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய நீதிமன்றம், தாக்கல் செய்யப்பட்ட மனுதாரரின் மனுவில் உள்நோக்கம் உள்ளது என்று கூறியதோடு மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்துள்ளது.
ALSO READ: ஆச்சர்யம், ஆனால் உண்மை.. விஜய் கோவிலை ஒத்திருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR