டெல்லி, மும்பை, மதுரை உள்பட நாடு முழுவதிலும் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தனித்தனிக் குழுவாகச் சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்!
நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. புகார்களின் அடிப்படையில், குற்றம்சாட்டப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.
அந்தவகையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிபிஐ இன்று மெகா சோதனையை நடத்தியது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 119 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 30 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப்பூர், ஐதராபாத், மதுரை, கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடைப்பெற்றது.
ஊழல், ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக நடைப்பெற்ற இந்த சோதனை நிறைவடைந்தபிறகுதான், வழக்குகள் தொடர்பான முழு விவரங்களும் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் வங்கி மோசடி தொடர்பாக சுமார் 50 இடங்களில் கடந்த 2-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.