ரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டி உள்ளார்.
நேற்று டெல்லியில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ரஃபேல் விவகாரத்தில் பொது விசாரணை தேவை என வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தீபங்கர் பட்டாச்சார்யா, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பிரசாந்த் பூஷன் மற்றும் பல இடது சாரி தலைவர்கள் கலந்துக்க்கொண்டனர்.
அப்பொழுது, ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதைத் தடுக்கவே, சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடிக்கு வேண்டப்பட்ட அதிகாரியைக் காப்பாற்றும் நோக்கில் சிபிஐ இயக்குநரைச் சட்டவிரோதமாக நீக்கியுள்ளார்கள். மோடி அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களும், அது தன்னுடைய கூட்டுக்களவாணி முதலாளிகளுக்குச் சலுகைகள் காட்டுவதும் பிரிக்க முடியாதவைகளாகும். அலோக் வர்மா மீதான நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும் எனக் கூறினார் சீத்தாராம் யெச்சூரி.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் இதற்கு மத்திய அரசு இதுக்குறித்து பேச மறுக்கிறது. ரஃபேல் ஊழல் விவகாரத்தில் தொடர்ந்து பிரதமர் மோடி பொய்களை பேசி வருகிறார் எனக் கூறினார்.