பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் - போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்டறியும் டெஸ்ட்... ஏன்?

Kolkata Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கொல்கத்தா போலீஸ் அதிகாரியிடமும் உண்மை கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ள சிபிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   

Written by - Sudharsan G | Last Updated : Aug 27, 2024, 08:14 PM IST
  • சஞ்சய் ராய் என்பவர் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார்.
  • 6 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி
  • நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் - போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்டறியும் டெஸ்ட்... ஏன்? title=

Kolkata Woman Doctor Rape And Murder Case Latest News Updates: 31 வயதான முதுநிலை மருத்துவ மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்தது. ஆக. 9ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் கடந்த 20 நாள்களுக்கு மேலாக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும், இந்த குற்றத்திற்கு தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையிலும், கொல்கத்தாவிலும், மேற்கு வங்கத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டி தலைமை செயலகமான நபன்னாவை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 23 பெண்கள் உள்பட 126 போராட்டக்காரர்களை கொல்கத்தா கைது செய்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீச்சியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களின் எதிர்தாக்குதலில் 15 போலீசார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

நாளை வேலை நிறுத்தம்...?

இதை தொடர்ந்து நாளை (ஆக. 28) மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு முக்கிய எதிர்க்கட்சியான பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம், தலைமை செயலகத்திற்கு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். சுமார் 6 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கொல்கத்தாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பெண் மருத்துவர் கொலையில் தினம் தினமும் புது புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.

மேலும் படிக்க | கொல்கத்தா கொடூரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாது... ஆதாரவாக வாதிடும் பெண் வழக்கறிஞர் யார்

போலீஸ் அதிகாரியிடம் தீவிர விசாரணை

இந்த குற்றத்தில் சஞ்சய் ராய்க்கு மட்டும்தான் தொடர்பிருக்கிறதா அல்லது வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை கண்டறிய சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.  அதை தொடர்ந்து, சஞ்சய் ராய்க்கு பல விஷயங்களில் உதவியாக இருந்த துணை உதவி காவல் ஆய்வாளரான அனுப் தத்தாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தது மட்டுமின்றி தற்போது அவருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை (Lie-Detector Test) மேற்கொள்ளவும் சிபிஐ முடிவெடுத்துள்ளது. 

சஞ்சய் ராய் இந்த குற்றம் நடந்ததற்கு பிறகு அனுப் தத்தாவின் வீட்டிற்கு சென்றதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, குற்றம் குறித்து சஞ்சய் ராய் அனுப் தத்தாவிடம் ஏதாவது தகவல் தெரிவித்தாரா, சஞ்சய் ராய்க்கு குற்றத்தில் அனுப் ஏதும் உதவி அளித்தாரா என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை உறுதி செய்யும் பொருட்டு அனுப் தத்தாவிற்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது அனுமதிக்காக நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும், நீதிமன்றம் அதுகுறித்து உத்தரவு பிறப்பித்த பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்.

6 பேரிடமும் பரிசோதனை 

இதற்கு முன், குற்றச் சம்பவம் நடந்தபோது ஆர்.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்திப் கோஷிடம் கடந்த சனிக்கிழமை (ஆக. 24) அன்று மோசடி கண்டறிதல் சோதனை (DDT) மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு அன்று லேயர்டு வாய்ஸ் அனாலிசிஸ் (Lowered Voice Analysis) பரிசோதனையும், அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை (ஆக. 26) உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையை நேற்று முடிக்க முடியாததால், இன்று மீண்டும் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் ராய், 4 மருத்துவர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர் ஒருவர் என மொத்தம் 6 பேருக்கும் உண்ணை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டிருக்கிறது. 

இதில், அந்த தன்னார்வ பணியாளர் உடன்தான் சஞ்சய் ராய் குற்றம் நடந்த அன்று முழுவதும் சுற்றியுள்ளார். மேலும், குற்றம் நடந்ததாக கூறப்படும் நேரத்திற்கு பின்னரும் கூட சஞ்சய் ராய் இயல்பாகவே இருந்ததாகவும், தன்னுடன் வந்து மது அருந்தியதாகவும் அந்த பணியாளர் விசாரணையில் கூறியுள்ளார். எனவே அவருக்கும் உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று உண்மை கண்டறியும் பரிசோதனையை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு கடந்த சனிக்கிழமை (ஆக. 24) அன்று  வந்தடைந்தது. ஆக. 8-9ஆம் தேதிகளில் நடந்தது என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள கல்லூரியின் முதல்வர் சந்திப் கோஷ் முதல் அனைவரிடமும் சிபிஐ உண்மை கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்கிறது.  

மேலும் படிக்க |  கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அன்று நள்ளிரவு நடந்தது என்ன? விசாரணையில் அந்த 4 டாக்டர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News