HMPV Virus, First Case In India: ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் (HMPV) தொற்று சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், தற்போது பெங்களூருவில் 8 மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் இந்த வைரஸின் முதல் பாதிப்பு இதுதான்.
அக் குழந்தை இதுவரை வெளிநாட்டுக்கோ, பாதிப்பு உள்ள பகுதிக்கோ அழைத்துச் செல்லப்படவில்லை என கூறப்படுகிறது. குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பதாக கர்நாடக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சீனாவில் தற்போது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும், HMPV தொற்றின் அதே வேரியண்ட்டால் தான் அந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.
கர்நாடகாவில் 2 பேருக்கு பாதிப்பு
இந்நிலையில், கர்நாடகாவில் மொத்தம் இரண்டு பேருக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுவாச நோய்களைக் கண்காணிக்க ஐசிஎம்ஆர் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்கான வழக்கமான கண்காணிப்பு மூலம் இரண்டு பேரிடம் HMPV தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை மற்றும் 3 மாத குழந்தை என இரண்டு குழந்தைகளிடம் HMPV தொற்று கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சீனாவில் வேகமாக பரவும் புதிய HMPV வைரஸ்.... அதிர்ச்சியில் உலக நாடுகள்
மக்கள் அச்சப்பட தேவையில்லை... இது வழக்கமான ஒன்றுதான்
இதுபோன்ற சுவாச நோய்களை கட்டுப்படுத்த இந்தியா முழுமையாக தயாராக இருப்பதாக மத்திய சுகாதர அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. கடந்த சில வாரங்களாக சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்களின் அறிக்கைகள் குறித்து விவாதிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (ஜன. 4) கூட்டு கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்தியது. மேலும், சீனாவின் தற்போதைய நிலைய அசாதாரணமானது இல்லை எனவும் அங்கு தற்போது காய்ச்சல் பருவம் நீடிப்பதாகவும் அமைச்சகம் தரப்பில் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்எஸ்வி மற்றும் HMPV ஆகிய தொற்றுகள் சீனாவில் வழக்கமாக இந்த பருவத்தில் பரவக்கூடியதுதான் என்றும் இதுதான் சீனாவில் தற்போது இந்த தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
HMPV வைரஸ்... யாருக்கு அதிக பாதிப்பு?
HMPV தொற்று ஏற்படுத்தும் அறிகுறிகள, சாதாரண ஜலதோஷத்தால் வரும் அறிகுறிகளை போன்றே இருக்கும். குழந்தைகள், முதியவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் HMPV தொற்றால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். HMPV தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் 5 வயதிற்கும் குறைவானவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் - எப்படி பரவுகிறது?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இதுகுறித்து, "HMPV சுவாச நோய்களை ஏற்படுத்தும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. அசுத்தமான பரப்புகளில் இருந்தும் எளிதில் பரவுகிறது. இது 2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இப்போது மேல் மற்றும் கீழ் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளில் HMPV தொற்று கவனிக்கப்பட வேண்டியதாக மாறியுள்ளது. இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்" என கூறுகிறது.
ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் - தடுப்பது எப்படி?
இதன் பரவலை தடுப்பது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில்,"ஒருவருக்கு இருமல் மற்றும் சளி இருந்தால், தொற்று பரவாமல் இருக்க மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதாவது சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலே இதன் பரவலை தடுக்க முடியும். மக்கள் சுவாச நெறிமுறைகளைப் பின்பற்றி, சளி மற்றும் காய்ச்சலுக்கு சாதாரண மருந்துகளை உட்கொள்ள வேண்டும்,'' என்றார்.
மேலும் படிக்க | நுரையீரலை டீடாக்ஸ் செய்து... வஜ்ரம் போல் வலுவாக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ