டெல்லி மாசுபாட்டை பொருட்படுத்தாமல், சிறப்பாக விளையாடிய இந்தியா, வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக BCCI தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்!
தேசிய தலைநகரில் அதிக அளவில் காற்று மாசுபாடு இருந்தபோதிலும், அதனை பொருட்படுத்தாமல், டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தி முதல் சர்வதேச டி20 விளையாடியதற்காக இந்தியா மற்றும் வங்கதேச அணி வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி டெல்லி மைதானத்தில் நடைப்பெற்றது.
Thank u to both the teams to play this game @ImRo45 @BCBtigers under tuff conditions .. well done bangladesh ..
— Sourav Ganguly (@SGanguly99) November 3, 2019
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 9(5) ரன்களுக்கு வெளியேற, மறு முனையில் ஷிகர் தவான் நிதானமாக விளையாடி 41(42) ரன்கள் குவித்தார். இவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணி தரப்பில் ஷபிபுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய லிட்டன் தாஸ் 7(4) ரன்களில் வெளியேற, முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60(43) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 19.3-வது பந்தில் 154 ரன்கள் எட்டிய வங்கதேச அணி, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதேவேலையில்., தலைநகர் டெல்லி தற்போது சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அங்கு எட்டி இருக்கிறது.
டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) ஞாயிற்றுக்கிழமை காலை 06:00 மணிக்கு 708-ஆக பதிவாகியிருந்தாலும், தேசிய தலைநகரின் சில பகுதிகளில், மாசு அளவு 'அதிர்ச்சியூட்டும்' 900 மதிப்பெண்ணை மீறியது.
டெல்லியின் இந்த மோசமான நிலையில், சாலையில் சாதாரனமாக நடப்பதே இக்கட்டான ஒரு விஷயமாக மாறியுள்ளது. இந்நிலையில் கடும் மாசுபாட்டுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இரு அணிகளுக்கும் BCCI தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.