பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர்கள் பெருமைப்படுத்தியுள்ளனர் என அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டி டிவீட் பதிவு செய்துள்ளார்.
கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது. எனவே, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய விமானப்படை வீரர்களின் வீர தீரச் செயலுக்கு டெல்லி முதல்வர் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர்கள் பெருமைப்படுத்தியுள்ளனர் என அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார்.
I salute the bravery of Indian Air Force pilots who have made us proud by striking terror targets in Pakistan
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2019