பணம் மற்றும் பதவிக்காக மக்களை ஏமாற்றுகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என அன்னாஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அரவிந்த்கெஜ்ரிவால் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். பணம் மற்றும் பதவிக்காக மக்களை ஏமாற்றுகிறார். அவர் முழு நேர அரசியல் வாதியாக மாறிவிட்டார்" என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அரசியலிலும் சமூகசமயத்திலும் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை முக்கியமானது. அரசியல் இதனை மாற்றி அமைக்கும். அரவிந்த் கெஜ்ரிவாலும் மாறி விட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியுடன் நட்பை உருவாக்கி ஏமாற்றி வருகிறார் எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேற்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக கெஜ்ரிவால் வசம் ரூ.6 கோடி அளித்ததாக ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பிர் சிங் ஜாக்கர் மகன் உதய் என்பவர் தெரிவித்திருந்தார், பின்னர் பல்பிர் சிங் இந்த குற்றச்சாட்டை மறுத்துவிட்டார்.
லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவான ஆம் ஆத்மி கட்சி, ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுத்தது. பின்னர் டெல்லி சட்டசபையில் போட்டியிட்ட அக்கட்சி 2013-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் தற்போது இக்கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.