அமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்த விசாரணையில், ரயில் ஓட்டுனர் பொய் சொல்கிறார் என நேரில் பார்த்தவர்கள் ஸ்லாம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்....
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மாநிலம் அமிர்தரசரசில் கடந்த வெள்ளிகிழமை இரவு (19-10-2018) தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த ரயில் விபத்தில் 61 பேர் பலியானதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமே காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, பல்வறு தரப்பில் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தசரா விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்த கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவி, தாமதமாக வந்ததால்தான் பெரும் விபத்து நேரிட்டது எனக் கூறப்பட்டது. விழாவுக்கு முறையான அனுமதி வாங்கவில்லை, அதனால் இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு யாரும் பாதுகாப்பு அளிக்கவில்லை போன்ற பல கருத்துகள் கூறப்பட்டன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின்மீது எதிர்க்கட்சிகள் தொடர் புகார்களை அடுக்கிவருகின்றன.
இந்நிலையில், இன்று மீண்டும் புதிதாக ஒரு குற்றசாட்டை கூறுகின்றனர். விபத்து தொடர்பாக ரயிலை ஓட்டிவந்த ஓட்டுநர் அளித்த வாக்குமூலம் பொய்யானவை எனப் பலரும் சாட்சியம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓட்டுநர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜோரா பதாக் பகுதியில் விழா நடக்கும் என எனக்குத் தெரியாது. எந்தத் தடைகளும் இல்லை முன்னேறி செல்லலாம் என்ற கிரீன் சிக்னல் மட்டுமே எனக்கு வழங்கப்பட்டது. நான் மக்கள் கூட்டத்தைக் கண்டதும் அவசரகால பிரேக்கை உபயோகித்தேன்; இருந்தும் எந்தப் பயனும் இல்லை. ரயில் மக்கள் கூட்டத்தை நெருங்கிவிட்டது. அதையும் மீறி நான் ரயிலை நிறுத்த முயன்றால் என் பயணிகளும் சேர்ந்து பாதிக்கப்படுவர். அதனால், முடிந்த வரை வேகத்தைக் குறைந்து பயணித்தேன்” எனத் தெரிவித்திருந்தார்.
Operation continues after being resumed yesterday evening at Amritsar's Choura Bazar where 60 people were killed and over 50 were injured after being run over by a train on October 19. #Punjab pic.twitter.com/AAPu8RT47O
— ANI (@ANI) October 22, 2018
இதையடுத்து அவர் கூறும் வாக்குமூலம் பொய்யானது என தெரிவித்தவர்கள் கூறியதாவது, “ ரயில் ஓட்டுநர் எங்கள்மீது மோத வேண்டுமென்ற நோக்கில் சென்றதாகவே தெரிகிறது. ரயில் சில விநாடிகளில் மக்கள் கூட்டத்தைக் கடந்து சென்றது. எவ்வளவு வேகமாக இயக்கியிருந்தால் சில விநாடிகளில் கடக்க முடியும்? ஆனால், ரயிலை மெதுவாக இயக்கியதாக ஓட்டுநர் பொய் கூறுகிறார்” என அப்பகுதியின் கவுன்சிலர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், “ ரயில் எவ்வளவு வேகமாகச் சென்றது என்பதற்கு நூறுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஆதாரமாக உள்ளன. உடனடியாக நாங்கள் செயல்படுவதற்குக்கூட நேரம் இல்லை. பிறகு, எங்களுக்கு மக்களின் அழுகுரல்கள் மட்டுமே கேட்டது” என மற்றொரு சாட்சியாளர் பரம்ஜீத் சிங் கூறியுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக இன்னும் யார் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், ஓட்டுநர்மீது எதிர்ப்புகள் வலுத்துவருகிறது.