பாஜக-வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா பேச்சு!!

உபி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஒடிஸா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.

Last Updated : Apr 16, 2017, 09:20 AM IST
பாஜக-வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா பேச்சு!! title=

புவனேஸ்வர்: உபி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஒடிஸா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.

பாஜக இதுவரை பலம் பெறாத மாநிலங்களில் பலம் பெறுவதற்கு தான் திட்டங்களை வகுத்துள்ளதாகவும், இப்போது வரை கிடைத்துள்ள வெற்றிகளைக் கொண்டு திருப்தி அடையக்கூடாது எனவும் பாஜக தலைவர் அமித் ஷா கூறினார்.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக தனது உச்சக்கட்ட வெற்றிகளை அடைந்து விட்டது என்ற பேச்சை நிராகரித்த அவர், மேற்கிலும் மத்திய அரசிலும் பெற்ற வெற்றிகளும், கிழக்கில் அஸ்ஸாமிலும், மணிப்பூரிலும் பெற்ற துவக்க நிலை வெற்றிகளும் உச்சமல்ல என்றும், தெற்கிலும், கிழக்கிலும் தனது திட்ட இலக்குகளை பற்றியும் எடுத்துரைத்தார். 

சென்ற ஆண்டு தேசிய செயற்குழு கூட்டத்தில் உ.பி உட்பட 5 மாநிலத் தேர்தல்களைப் பற்றி தீர்மானம் எடுக்கச் சொன்னதை குறிப்பிட்ட அமித் ஷா அதே போல அடுத்து வரவுள்ள ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடக ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரவுள்ளத் தேர்தல்களிலும் இதே போன்ற தீர்மானத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்தனர். இக்கூட்டத்தில் 13 பாஜக மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த எண்ணிக்கையில் முதல்வர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கு கொள்வது இதுவே முதல்முறை.

கட்சியினரை சந்திக்க தான் 95 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூத்தத் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் 15 நாட்களை கட்சி அதிகம் பலம் பெற்றிருக்காத மாநிலங்களான, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவில் செலவிடும்படி கேட்டுக்கொண்டார். கங்கிரஸ்சை தோற்கடிக்க முடிந்த பாஜகாவால் பெரிய மாநிலக்கட்சிகளை தோற்கடிக்க முடியவில்லை என்பதை மறுத்து உபியை உதாரணமாக காட்டிய அமித் ஷா, இடது சாரிகளை கேரளாவிலும், திரிபுராவிலும் தோற்கடித்து ‘தாமரையை மலர’ வைக்க முடியும் என்றார்.

இதரக் கட்சியினரைப் போலில்லாமல் பாஜக செயல்படும் கட்சியாக இருப்பதால் மக்கள் 75 சதவீத இடங்களைத் தேர்தலில் கொடுத்துள்ளனர் என்றார் அமித் ஷா. மாநிலத் தேர்தல்களில் வெற்றி கிடைத்திருப்பது ஏழைமக்கள் சார்பாகவும், மக்கள் நலக் கொள்கைகளையும் மோடி அரசு மேற்கொண்டதாலுமே என்ற அமித் ஷா, சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமானத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகளை இதரக் கட்சிகள் இரண்டு-மூன்று முறை ஆட்சியை கைப்பற்றிய போதும் செய்யவில்லை என்ற ஷா, ஆட்சியின் கொள்கைகளே இதைச் சாதித்தது என்று பாராட்டினார். 

கூட்டம் நடைபெற்ற அரங்கத்தினுள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் அமித் ஷாவின் பேச்சு விவரங்களை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பின்னர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியமைப்பதே பாஜகவின் இலக்காகும். இதேபோல், எதிர்காலத்தில் தமிழகம், கேரளத்திலும் ஆட்சியமைக்க பாஜக முனைப்புடன் செயல்படும் என்று அமித் ஷா கூறியதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Trending News