தெற்காசிய செயற்கைக்கோள் மே 5 ஏவப்படும்

Last Updated : May 1, 2017, 08:33 AM IST
தெற்காசிய செயற்கைக்கோள் மே 5 ஏவப்படும் title=

 

தெற்காசிய செயற்கைக் கோள் மே 5-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அகில இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியதாவது:

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மத்திய அரசின் கோட்பாடானது, நமது நாட்டை மட்டும் உள்ளடக்கியதல்ல; இது உலகத்தையும் உள்ளடக்கியது. குறிப்பாக, நமது அண்டை நாடுகளை உள்ளடக்கியது

வருகிற 5-ம் தேதியன்று, தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த செயற்கைக்கோளால், இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து நாடுகளும் பயனடையும். அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் ஈடு இணையற்ற இந்தப் பரிசு, தெற்காசியா முழுமைக்கும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகும்/

தெற்காசியா தொடர்பாக இந்தியா கொண்டுள்ள தீர்மானத்துக்கு இந்த செயற்கைக்கோள் ஒரு சிறந்த முன்னுதாரணம். தெற்காசியா முழுவதும் வளர்ச்சியடைய இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாட்டின் பிரதமராக அவர் பதவியேற்றவுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளுக்காக இந்தியா செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார். ஆனால், இந்தத் திட்டத்தில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டவில்லை. அந்நாட்டைத் தவிர, இத்திட்டத்தில் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 7 நாடுகள் இணைந்துள்ளன. 

இந்த செயற்கைக்கோளைத் தயாரிக்க ரூ.235 கோடியை இந்தியா செலவிட்டுள்ளது. ஆனால், செயற்கைக்கோளை ஏவுதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால், இதன் மொத்த செலவு ரூ.450 கோடியாகும். 2,230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 50 மீட்டர் நீளம் கொண்டது. விண்ணில் 12 ஆண்டுகள் பணியை மேற்கொள்ளும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Trending News