ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. 5 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் கீழ் 3.36 கோடி இணைப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் 2018-19-ம் நிதியாண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக ரூ.4800 கோடி செலவில் மேலும் 3 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த திட்டத்துக்கான காலவரையறை 2020-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிவாயு இணைப்பு ஒன்றுக்கு ரூ.1600 மானியத்தை மத்திய அரசு வழங்கும். சிலிண்டர் பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும் இணைப்பு கட்டணத்துக்காக இந்த தொகை வழங்கப்படும். அடுப்பை பயனாளியே வாங்க வேண்டும்.
இந்த திட்டத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.