வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டருக்கு ஆதார் அவசியமா? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

நாளை உச்சநீதிமன்றத்தில் சமூக வலைதளத்தை ஆதார் உடன் இணைப்பது தொடர்பான வழக்கு நடைபெற உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2019, 08:42 PM IST
வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டருக்கு ஆதார் அவசியமா? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை title=

புதுடெல்லி: பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை உள்ளிட்ட சமூக வலைதளத்தை ஆதார் உடன் இணைப்பது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெற உள்ளது. இன்று, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செயயப்பட்டது. அதில் இந்த விவகாரத்தை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் பேஸ்புக் தரப்பில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் என பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது போன்ற விஷயங்கள் தனி மனிதரின் அந்தரங்கத்தில் குறுக்கிடும் செயல் என பேஸ்புக் நிறுவனம் வாதிட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம், மத்திய அரசு, கூகிள், ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவதில் தங்கள் பதில் மனுவை செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறுத்த மறுத்துவிட்டது. ஆனால் அந்த வழக்கில் முக்கியமான உத்தரவுகள் எதையும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் சமூக வலைதளத்தை ஆதார் உடன் இணைப்பது தொடர்பான வழக்கு நடைபெற உள்ளது.

Trending News