திருவனந்தபுரம்: கேரளாவில் வரதட்சணை காரணமாக பெண்கள் உயிரிழப்பது தொடர்கதையான ஒன்றாகவே நிகழ்ந்து வருகிறது.என்னதான் கல்வியறிவு மிகுந்த மாநிலமாக இருந்தாலும் இதுபோன்ற கொடூரர்களால் பெண்களுக்கெதிராக அநீதிகள் இழைக்கப்பட்டு வருவது பெரும் வேதனையளிக்கக்கூடிய ஒன்று.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த விஜய சேனன் என்பவரின் மகள் உத்ரா(25). இவருக்கும் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்த சூரஜ்குமார்(27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2020-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதியன்று பாம்பு கடிக்கப்பட்டதாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் உத்ரா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதேபோல் ஏற்கனவே 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி கணவரின் வீட்டில் வைத்து பாம்பு கடித்தது உத்ரா மருத்துவமனையில் 52 நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார்.
இதனையடுத்து மீண்டும் பாம்பு கடித்ததை சர்ப்ப தோஷமாக இருக்கலாம் அதனால் தான் மீண்டும் உத்ராவை பாம்பு கடித்துவிட்டது என்று அனைவரும் முதலில் நம்பினர். பின்னர் இந்த மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து, உத்ராவின் பெற்றோர் அப்போதைய கொல்லம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இதையடுத்து உத்ரா மரண வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் போலீசார் கிடுக்குப்பிடியாக விசாரணை நடத்தினர். அதில் சொத்து மற்றும் நகைகளுக்கு ஆசைப்பட்டு பாம்பை கடிக்க வைத்து உத்ராவை அவரது கணவர் சூரஜ்குமார் கொலை செய்தது அம்பலமானது.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சூரஜ்-ன் முன்னுக்குப் பின் முரணான பதிலில் சந்தேகமடைந்த போலீசார் அவரை துருவித்துருவி செய்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நாகப்பாம்பு தீண்டினால் அதிக வலியினை ஏற்படுத்தும் அதனால் உத்ராவிற்கு சூரஜ் தூக்க மாத்திரைகளை கொடுத்து பின்னர் நாகபாம்பின் தலையை அமுக்கி உத்ராவை கடிக்க வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சூரஜ்குமார் குற்றவாளி என்று நீதிபதி நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் கொலை செய்த ஆதாரங்களை அழித்தது மற்றும் கொலைக்கு சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காக 10 மற்றும் 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த 17 ஆண்டுகள் ஜெயிலில் அனுபவிக்கும் தண்டனை மட்டுமின்றி, சூரஜ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதோடு அவருக்கு ரூ. 5லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஒருவழியாக இந்த கொலைக்கு தீர்ப்பு கிடைத்தாலும் போன உயிர் திரும்ப வரப்போவதில்லை. வரதட்சனை கொடுமையால் இறக்கும் இறுதி உயிர் உத்ராவாகவே இருக்கட்டும்.இந்த தீர்ப்பினை பார்த்து இனிமேலாவது இந்தக் கொடூரர்கள் திருந்த வேண்டும்.
ALSO READ ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR