ஐதராபாத்: ஐதராபாத்தில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் மே 1 முதல் காகிதங்களை பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்துள்ளனர்!
காகிதங்களின் பயன்பாட்டினை குறைக்கும் நோக்கில், ஐதராபாத் காவல்துறை வரும் மே 1 முதல் தங்கள் அலுவலகங்களில் கணினி மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக E-Office என்னும் ப்ரத்தியே மென்பொருளினை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் இனி காவல் நிலையங்களில் நடைப்பெறும் அனைத்து செயல்பாடுகளும் மின்னனு முறையில் செயல்படும் எனவும், இதுவரை தேங்கியிருக்கும் பழைய கோப்புகள் அனைத்தும் இந்த புதிய மென்பொருளில் பதிவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய மென்பொருளின் மூலமாக வேலைசுமை குறையும் எனவும், காவல்துறைக்கு வரும் புகார் கோப்புகள் எத்தனை நாள் தேங்கியுள்ளது என்பது குறித்தும் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பானது நேற்றைய தினம் ஐதராபாத் கமிஷ்னர் அன்ஜானி குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த புதிய மென்பொருளினை பயன்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.