புதுடெல்லி: காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், நாட்டிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள நகரம் டெல்லி என்றும் கிரீன் பீஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி காற்று மாசுபாடு புகாரில் சிக்கி தவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி மட்டுமல்ல இந்தியாவில் உள்ள 168 நகரங்களும் சர்வதேச சுகாதார அமைப்பின் காற்று மாசுபாடு கண்காணிப்பு புகாரில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிரீன் பீஸ் அமைப்பால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின் படி அதன் தரத்திற்கு அருகில் இந்திய நகரங்கள் எதுவும் இல்லை என்று கிரீஸ் பீஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள முதல் 20 நகரங்களில், கடந்த 2015-ஆம் ஆண்டில் பிஎம்10 என்ற காற்று மாசு குறீயீட்டின் அளவானது 268/168 என்ற அளவில் இருந்துள்ளது.
இந்தப் பட்டியலில் 268 என்ற குறீயிட்டு அளவுடன் தில்லி முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 258 முதல் 200 என்ற குறீயிட்டு அளவுடன் காஜியாபாத், அலாகாபாத், பரேலி (உத்தரப் பிரதேசம்), ஃபரீதாபாத் (ஹரியாணா), ஜாரியா (ஜார்க்கண்ட்), அல்வார் (ராஜஸ்தான்), ராஞ்சி, குசுன்டா, பாஸ்டகோலா (ஜார்க்கண்ட்), கான்பூர் (உத்தரப் பிரதேசம்), பாட்னா (பிகார்) ஆகிய நகரங்கள் உள்ளன.
இதில் 268 என்ற காற்று மாசு குறியீடானது, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படும் தேசிய சுற்றுப்புற காற்றுத் தர மதிப்பீட்டு அளவை விட 4.5 மடங்கு அதிகமாகும். அதேவேளையில், உலக சுகாதார அமைப்பால் (டபிள்யுஹெச்ஓ) வரையறுக்கப்பட்ட அளவை விட 13 மடங்கு அதிகமாகும்.
இதில் டெல்லியில் கடந்த 2015 அக்டோபர் முதல் 2016 பிப்ரவரி வரையிலான மாதங்களில் காற்று மாசுபாட்டு குறியீடானது 500 என்ற அபாய அளவை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.
தென் இந்தியாவில் வாராங்கல் உள்ளிட்ட சில நகரங்கள் தான் தேசிய சுற்றுச்சூழல் காற்று தரத்தின் படி உள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள 20 நகரங்களில் டெல்லி தான் முதலிடத்தில் உள்ளது.
கிரீன் பீஸ் அமைப்பின் தகவலின் படி காற்று மாசுபாட்டால் ஜி.டி.பி 3 சதவீதம் சரிவதோடு, 12 லட்சம் மக்கள் இறப்பதற்கு காரணமாக உள்ளது.