மாலையுடன் ஓய்கிறது விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் பிரச்சாரம்..!

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது!!

Last Updated : Oct 19, 2019, 07:40 AM IST
மாலையுடன் ஓய்கிறது விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் பிரச்சாரம்..! title=

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரு தொகுதிகளிலும் கடந்த 2 வாரங்களாக அனல்பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தவுடன், வாக்குப்பதிவுக்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளில் 1,400 பேர் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக 800 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 225 வாக்குச் சாவடிகளில் 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 1,000 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். இரு தொகுதிகளிலும் திங்கட்கிழமையன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அமைதியான,மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுகின்ற ஆட்சி நடைபெற்று வருவதாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் முண்டியம்பாக்கத்தில் அவர் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்துப் பேசினார்.

 

Trending News