கத்தி கத்தி படிக்க வேண்டியவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர் என வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து தமிழக BJP தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை பச்சையப்பா கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதுபோன்று மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில், பச்சையப்பா கல்லூரி, மாநிலக் கல்லூரி, நியூ கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளின் முதல்வர்களோடு சென்னை எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னையில் 3 கல்லூரிகளில் சுமார் 90 ரூட்டு தல மாணவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுப்பிடிக்கப்பட்டு அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்; "பட்டம் பெற படிக்க வேண்டியவர்கள் பட்டாக்கத்தியுடன் படிக்கின்றனர். கத்தி கத்தி படிக்க வேண்டியவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கும் அதில் முக்கிய பங்கு இருக்கிறது" என்றார்.
மேலும், பாஜகவின் மீதுள்ள பயத்தினால் புதிய கல்விக்கொள்கை குறித்து திமுகவினர் பேசி வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தில் சென்ற ஏனைய மாணவர்களை பேரிந்திலிருந்து இறக்கி அவர்களை ஓட ஓட விரட்டி கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி காயப்படுத்தினர்.
பின்னர் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலைவீசி தேடிப்பிடித்து கைது செய்தனர். மாணவர்களின் வன்முறை வெறியாட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.