சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளார் என்னும் தகவல்கள் வெளியான நிலயில்., அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது, தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் திருநாவுக்கரசர் எம்பி, எச்.வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.