தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு!!
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக மாநில முதல்வர்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பிக்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சி எம்.பிக்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் மோடியின் பெயரை முன்மொழிந்தனர். இதன்மூலமாக நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.