4 மாநிலங்களில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 23-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., சத்தீஸ்கர் மாநிலத்தில் தாண்டே வாடா, கேரள மாநிலத்தில் பலா, திரிபுராவின் பதர்கட் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தின் ஹமீர்ப்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து நான்கு மாநிலத்தின் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பிட்ட இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 28-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் வேட்புமனு தாக்கல் செப். 4-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
மேலும் 7-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள். மேலும் செப். 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும், பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகள் செப்., 27-ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.