மக்களவை தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் பேசியதாவது:-.
நேர்மையான முறையில் எனது கட்சி வேட்பாளர்கள் ஓட்டுக்களைப் பெற்றுள்ளனர். இந்த அற்புதமான வாக்குகளை அளித்த மக்களுக்கு என் நன்றிகள். அற்புதமான உறுதியையும், அரவணைப்பையும் மக்கள் எங்களுக்குக் கொடுத்துள்ளனர். எங்களது வேட்பாளர்களை வெற்றி வேட்பாளர்களாகத்தான் நான் கருதுகிறேன்.
எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். தமிழக மக்களுக்கு தொடர்ந்து செயலாற்றுவோம். தேர்தல் தோல்வி கண்டு எங்களுக்கு ஏமாற்றம் இல்லை. புதிதாக உருவான கட்சிக்கு மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவு மிகப் பெரியது.
வெற்றி மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும் மோடி. ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்தியக் குடிமகனாக இதை நான் பிரதமருக்கு வைக்கிறேன். ரசியலை நான் தொழிலாக நினைக்கவில்லை. தொழிலாக நினைத்தால் அது மாபெரும் தவறு.
14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓட விட்டுள்ளனர். மக்களின் வாக்குகள், நாங்கள் நேர்மையான வழியில் பயணித்து பணிகளை மேற்கொள்ள மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.