போதை பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வலி நிவாரணியில் பயன்படுத்தப்படும் ’ஓபியாட்’ எனப்படும் மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சுமார் 2.4 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 63,600 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, போதை பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிடும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க அவரின் நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும், ஆனால் அதற்கு கடுமையான அரசியல் மற்றும் சட்ட ரீதியான எதிர்ப்பை தனது நிர்வாகம் சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது நாம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றால் நாம் நமது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்" என டிரம்ப் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட அந்த கடுமையான நடவடிக்கையில் மரண தண்டனையும் அடங்கும்.
போதை மருந்துளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நியூ ஹாம்ஷர் மாநிலத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த மாதம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்தில், கடத்தல்கார்ர்களுக்கு "அதிகபடியான" தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இவ்வாறு பேசியது குறிபிடத்தக்கது.