மார்கழி 1ம் நாள்: திருப்பாவையை பாடி இறையருள் பெறுங்கள்!!

மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.

Last Updated : Dec 17, 2019, 08:06 AM IST
மார்கழி 1ம் நாள்: திருப்பாவையை பாடி இறையருள் பெறுங்கள்!! title=

மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.

மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.

முதலாவது பாடல்:-

திருப்பாவை 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்

மார்கழி மாதம் பாவை நோன்பு இருக்கும் பெண்களை எழுப்பும் போது கண்ணனின் அழகை பாடுகின்றனர். கதிரவனைப் போன்ற ஒளி பொருந்தியவன், குளிர் நிலவைப் போல முகம் கொண்டவன் என்று வர்ணித்து நோன்பு நோக்க அழைக்கின்றனர் பெண்கள். மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற வீரம் நிறைந்த மகன். அவனுக்கு கரிய மேகத்தைப்போன்ற மேனி அதிலேயே அவன் கருணாசாகரனாக காட்சி தருகிறான். தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவன். அவனுக்கு கதிரவனைப் போல பிரகாசமாகவும், அதே நேரத்தில் குளிர் மதிபோல தண்மையான வாத்ஸல்யம் நிரம்பிய முகம்!. அந்த நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள். பக்தி யோகமே இறைவனின் அருளைப் பெறவும், அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் முதல் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

திருவெம்பாவை பாடல் - 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே

ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அருட் பெருஞ்சோதியை உடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது என்ன செவிடாகி விட்டதா?. அந்த மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி கேட்டு தெருவில் சென்ற எங்கள் தோழி ஒருத்தி விம்மி அழுது, பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சித்துக் கிடந்தாள். ஆனால், என் தோழியே நீ இன்னமும் உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனை வாழ்த்திப் பாட உடனே எழுந்து வருவாயாக! என்று அழைக்கின்றனர்.

 

Trending News