கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் மாசி பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது!
மாசிமாத பூஜைக்காக நடை இன்று திறக்கப்படுவதை ஒட்டி சபரிமலை கோவிலில் பதற்றத்தை தவிர்க்க 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவில் நடையை இன்று மாலை மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். தொடர்ந்து வரும் பிப்., 17-ஆம் தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும் என சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மண்டல கால பூஜை, மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலை நோக்கி பெண் பக்தர்கள் படையெடுத்ததை போல், மாசி மாத பூஜையின் போதும் சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சமரிமலை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து 3 எஸ்.பி.க்கள் தலைமையில் 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சன்னிதானத்தில் எஸ்.பி. அஜீத் தலைமையிலும், பம்பையில் எஸ்.பி. மஞ்சு நாத் தலைமையிலும், நிலக்கல்லில் எஸ்.பி. மது தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.