ஆடிப்பட்டம் தேடிவிதை, ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பது பழம்மொழிகள் என்றால், ’ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தா என் புள்ளை டாப்பா வந்திடுவான்’ என்பது போன்ற சினிமா வசனங்களும் பிரபலமானவை தானே?
தமிழ் ஆண்டின் நான்காவது மாதம் ஆடி. முற்காலத்தில் ஆடி மாதப்பிறப்பு ஒரு பண்டிகையைப் போல சிறப்பாகக் கொண்டாடப்படும். இம்மாதத்தில் வரும் அமாவசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்து மதம் கூறுகிறது.
பருவமழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடும். ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளாக, ஆடி மாத பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு எவ்வளவு சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது என்பதை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புதினம் மிகவும் அழகாக சொல்லும்.
ஆடித் தள்ளுபடி என்பதை அறியாத தமிழர்களே இருக்கமாட்டார்கள். ஆடி மாதம் கடைகளில் கிடைக்கும் தள்ளுபடி விற்பனைக்காக ஆண்டு முழுவதும் பணம் சேர்த்து வைக்கும் வழக்கம் உண்டு என்று வேடிக்கையாக கூறப்படுவதுண்டு.
பொதுவாக ஆடி மாதம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறைவாகவே நடைபெறுவதால் ஏற்படும் விற்பனை மந்த நிலையைக் குறைக்கவும், ஆண்டு முழுதும் தேங்கிக் கிடக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் மேற்கொள்ளப்படும் உத்தி என்பதால் வியாபாரிகளுக்கும் ஆடி மாதம் முக்கியமானது.
நகை, புடவை கடைகளில் மட்டுமே இருந்த ஆடித்த்தள்ளுபடி இப்போது பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் பரவி விட்டாலும், இந்த ஆண்டு கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமியானது அனைத்து ஆடித் தள்ளுபடிகளையும் 100% தள்ளுபடி செய்துவிட்டது.
Read Also | முருகனின் கந்த சஷ்டி சர்ச்சையில் கருப்பர் கூட்டத்திற்கு தண்டனை கிடைக்குமா?
ஆடி முதல் மார்கழி வரையில் சூரியன் தென் திசையில் சுழலும் அதை தட்சிணாயனம் என்றும், சூரியன் வடதிசைக்கு நகரும் தை முதல் ஆனி வரையிலான காலகட்டத்தை உத்தராயணம் என்றும் சொல்வார்கள். இந்து புராணங்களில் சூரியனின் இந்த நகர்வுக்கு முக்கியத்துவம் அதிகம். ஒரு சுழற்சி மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.
இன்று ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை. இம் மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். ஆடி செவ்வாயில் அவ்வையார் பாட்டிக்கு கொழுக்கட்டை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவ்வையார் வழிபாடு பரவலாக நடைபெறுகிறது.
பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் காலம் காலமாக தொடர்கிறது.
அவ்வையாருக்கு என்று தனி ஆலயம் உண்டு தெரியுமா?
தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள குமரி மாவட்டத்தில் தாழக்குடி அருகே அமைந்துள்ள அவ்வையார் கோவிலில் ஆடி செவ்வாய் அன்று பெண்கள் கூட்டம் அலைமோதும். கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை அவ்வையாருக்கு படைத்து வழிபடுவது இங்கு சிறப்பு.