வரலட்சுமி விரதத்தின் வரலாறும், தாத்பர்யமும் தெரியுமா?

சாபவிமோசனத்திற்காக தேவகுலப் பெண் சித்திரநேமி அன்னை பார்வதியை அணுகினார். அன்னை சொன்ன விமோசனமே இன்று அனுசரிக்கப்படும் வரலட்சுமி விரதத்தின் ஆதாரம்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2020, 06:06 AM IST
வரலட்சுமி விரதத்தின் வரலாறும், தாத்பர்யமும் தெரியுமா? title=

புதுடெல்லி: வரலட்சுமி விரதம் பற்றிய பல விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த நோன்பை நோற்பதன் தாத்பர்யம் உங்களுக்குத் தெரியுமா? மகாலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமியாக விளங்கும் அன்னை, எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள்.

அதர்வண வேதத்தின் படி, லட்சுமிதேவி பொறுமை மிக்கவள், அனைவருக்கும் நன்மையே செய்வாள். குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. நித்திய சுமங்கலியான வரலட்சுமி, மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். 

பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அன்னை மகாலட்சுமி. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். 

சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அதற்காக பூலோகம் வந்த சித்ரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.

புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். 

மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.

Read Also | இன்று வரலட்சுமி விரதம் 2020: எப்படி நோன்பு இருப்பது? பூஜைக்கு தேவையான பொருட்கள் என்ன?

நோன்பிற்கு முதல் நாள் அம்மனை அழைப்பதற்காக பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவற்று அலங்காரம் செய்து வீட்டில் இருக்கச் செய்வார்கள். இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு என்பவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் 

உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைத்து, கலசத்திற்குள் லட்சுமி தேவியை ஆவஹனம் செய்வார்கள். பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் திருமால் பெருமாளின் இதயத்தில் வீற்றிருக்கும் அன்னை லட்சுமி தங்கள் வீட்டிற்குள், கலசத்திற்குள் அன்று வாசம் செய்வதாக ஐதீகம் சொல்கிறது.

வரலட்சுமி அன்னை வீற்றிருக்கும் கலசத்தைக் கிழக்குப் பக்கமாக வைத்து மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வணங்குவர். பருப்பு வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி, பழங்கள் என அவரவர் வழக்கப்படி அன்னைக்கு படைத்து வணங்குவார்கள்.  பின்பு  நோன்பு எடுத்ததின் அடையாளமாக, நோன்புச் சரடிற்குத் தனியே பூஜை செய்து, வலது மணிக்கட்டில் சரடைக் கட்டிக் கொள்வதோடு பூஜை முடிகிறது.  

மறுநாள் சனிக்கிழமையன்று புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்த சுண்டல் முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.

அம்மனின் மனம் குளிர்வதற்கான பாடல்களைப் பாடி ஆரத்தி எடுத்த பின்பு அம்மனை மெதுவாக அந்த அரிசியுடன் கூடிய பாத்திரத்தில் வைத்து மூடி வைப்பார்கள். நமது அன்பான வரவேற்பையும் ஆராதனைகளையும் ஏற்றுக் கொண்ட திருமகள் நம்முடன் என்றென்றும் வாசம் செய்து வாழ்வை வளமும், மகிழ்சியும் ஏற்படுத்துவாள் 

என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. அதுமட்டுமல்ல, வரலட்சுமி விரதத்தன்று, அம்மன் தனது பிறந்த வீட்டிற்கு வருவதாக நம்பப்படுகிறது.பொதுவாக திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று, புதிதாக திருமணம் செய்துக் கொண்ட பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். 

புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் பெண்கள் வரலட்சுமி விரதம் கண்டிப்பாக அனுசரிப்பார்கள். சில வீடுகளில் வரலட்சுமி நோன்பு நோற்கும் வழக்கம் இல்லை என்றாலும், பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிலிருந்து நோன்பு எடுத்து வரும் பழக்கம் உள்ளது.

Trending News