பணம் ஈட்ட தனக்கு கிடைக்கு ஒவ்வொரு வாய்ப்பினையும் இந்தியன் ரயில்வே பயன்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் துறையை மீட்க இயலும் எனவும், பங்குச்சந்தையில் நுழைய முடியும் எனவும் நம்புகிறது.
அந்த வகையில்., இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன், அதாவது IRCTC இந்த நவராத்திரி சந்தையில் தனது முதல் ஆரம்ப பொது வழங்கல் (IPO) அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது. IRCTC-யின் IPO சந்தையில் வந்த பிறகு, முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்து நல்ல தொகையை சம்பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி நவராத்திரியின் போது IPO-வை சந்தைக்குக் கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 29 அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், IPO செப்டம்பர் 30 அல்லது அதற்குப் பிறகு சந்தையைத் தாக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் IPO சந்தையில் வருவதால், நிறுவனம் ரூ .600 கோடி மூலதனத்தை திரட்ட முடியும் என்று நிறுவனம் நம்புகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் IRCTC-யின் IPO செயல்முறையை நிதி அமைச்சகம் தொடங்கியது.
IRCTC டிக்கெட் முன்பதிவு, ஹோட்டல் முன்பதிவு, ரயில்வே கேட்டரிங் சேவை மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகளை வழங்குகிறது. IRCTC-யின் டிக்கெட் இணையதளத்தில் தினமும் 72 லட்சம் உள்நுழைவுகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் சமீப காலங்களில் நிறுவனத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.