இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான, அசோக் லேலண்ட் தங்களது 5 ஆலைகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது!
இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டு மந்த நிலை காரணமாக வாகனங்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகிறது. இத்துடன் உழியர்களுக்கு விடுப்புகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அசோக் லேலண்ட் நிறுவனம் தனது 5 ஆலைகளில் வாகன உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்., சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் ஒசூரின் 1 மற்றும் 2-வது உற்பத்தி மையங்களை 5 நாட்களுக்கு மூடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மும்பை பந்த்ரா, ராஜ்ஸ்தானின் அல்வாரில் தலா 10 நாட்களும், உத்ரகண்ட் மாநிலம் பந்த்நகரில் 18 நாட்களுக்கும் உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பங்குச் சந்தைக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் அசோக் லேலண்ட் 10,927 வாகனங்களில் மொத்த விற்பனையில் 28% சரிவைக் கண்டது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 15,199 யூனிட்டுகள் விற்பனை செய்தது. மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 10,101-ஆக இருந்தது, இது 29% குறைந்து ஜூலை 2018-ல் 14,205 ஆக இருந்தது.
உள்நாட்டு சந்தையில் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை கடந்த மாதம் 41% குறைந்து 6,018 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் 10,152 யூனிட்களாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 4,053 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது, 2019 ஜூலை மாதத்தில் இலகுவான வணிக வாகன விற்பனை 4,083-ஆக இருந்தது.
இருப்பினும், இந்தியாவின் இரண்டாவது பெரிய நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனம் உற்பத்தியாளர், சாலை கட்டுமானத் திட்டங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட அரசாங்க செலவினங்களின் பின்னணியில் கட்டுமான மற்றும் சுரங்க லாரிகளுக்கான தேவை திரும்பும் என்று நம்புகிறது.
முன்னதாக, இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, ஹரியாணாவின் குருகிராம் மற்றும் மானெசர் ஆகிய ஆலைகளில் இரண்டு நாட்களுக்கு தங்களது உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.