பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து வரும் நிலையில், அதன்பயனாக பெட்ரோல், டீசல் விலைகளை கணிசமாக குறைக்கப்படும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் கடந்த ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.78.12, ரூ.71.86 ஆக இருந்தன. இன்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 32 டாலராக குறைந்து விட்டது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 57.00 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 72.57 ரூபாயாகவும், டீசல் விலை ரூ.66.02 ஆகவும் உள்ளது. இது இயல்பான விலையை விட முறையே லிட்டருக்கு 15 ரூபாயும், 17 ரூபாயும் அதிகம் ஆகும். கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்டுள்ள பயன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்படாத நிலையில், இப்பயன்களை பொதுத்துறை மற்றும் தனியார்துறை எண்ணெய் நிறுவனங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் லாபமாக பெறும் தொகைகள் கலால் வரி உயர்வுக்கு பிந்தையதாகும். கச்சா எண்ணெய் விலை சரிவால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலைகள் சராசரியாக ரூ.25.00 குறைந்திருக்க வேண்டும் என்றால் அதில் ரூ.6.00 மட்டுமே விலைக்குறைப்பு செய்யப்பட்டு மக்களுக்கு பயன் கிடைத்துள்ளது. மீதமுள்ள 19 ரூபாயில் 3 ரூபாய் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசுக்கு செல்கிறது. மீதமுள்ள தொகை எண்ணெய் நிறுவனங்கள் கணக்கில் சேருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் இப்போது அனுபவித்து வரும் கூடுதல் லாபமும் அடுத்த சில நாட்களில் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசின் கணக்கில் சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
உயர்த்தப்பட்ட கலால் வரியையும் சேர்த்து, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98, டீசலுக்கு ரூ.18.83 வீதம் மத்திய அரசு கலால் வரி வசூலிக்கிறது. இதில் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த போது, அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருந்ததன் மூலம் உயர்த்தப்பட்டவை ஆகும். அவற்றை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக ரூ.3 கலால் வரி வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்கள் சாதாரண மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்தையும் அரசே அனுபவிக்கக்கூடாது.
கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.39,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி வருமானம் கிடைத்து வரும் நிலையில், இந்த வருமானத்தை ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அடுத்தடுத்து கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பொருளாதார பின்னடைவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்களை அரசே முழுமையாக பறித்துக் கொள்ளக் கூடாது; மக்களுக்கும் விலைக்குறைப்பு மூலம் ஓரளவு சலுகை வழங்க வேண்டும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்; இனி வருங்காலங்களிலும் கலால் வரியை உயர்த்தக்கூடாது. மாறாக, பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.