புதுடெல்லி: செப்டம்பர் 12 முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் சனிக்கிழமை அறிவித்தார். இது ஏற்கனவே இயங்கும் 230 ரயில்களுக்கு கூடுதலாக இயங்கும்,” என அவர் தெரிவித்ததாக செய்தி ஏஜென்சி பி.டி.ஐ கூறியுள்ளது.
இதற்கான முன்பதிவு செப்டெம்பர் 10ம் தேதி முதல் தொடங்கும். இது தவிர, எந்த ரயில்களில் அதிக வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது என்பதை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப, அதில் க்ளோன் ரயிலை இயக்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று யாதவ் கூறினார். "ஒரு குறிப்பிட்ட ரயிலுக்கு வெயிட்டிங் லிஸ்ட் மிக அதிகமாக நீண்டதாக இருந்தாலும், உண்மையான ரயிலுக்கு முன்னால் ஒரு குளோன் ரயிலை இயக்குவோம், இதனால் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் அதில் பயணிக்க முடியும்" என்று ரயில்வே வாரியத் தலைவர் கூறினார்.
மாணவர்கள் தேர்வு எழுதவோ அல்லது இதே போன்ற பிற நோக்கங்களுக்காகவோ மாநிலங்கள் ரயில் சேவையை வழங்க வேண்டும் என கோரிக்கை வரும்போதெல்லாம் ரயில்வே ரயில்களை இயக்கும் என்றும் யாதவ் கூறினார்.
இதற்கு முன்னர், பீகாரில் நீட், ஜேஇஇ மற்றும் என்டிஏ தேர்வுகளுக்கு வரும் மாணவர்களின் வசதிக்காக செப்டம்பர் 2 முதல் 15 வரை 40 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக ரயில்வே அறிவித்திருந்தது.
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதை தடுக்க நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் 25 முதல் பயணிகள், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை ரயில்வே நிறுத்தி வைத்திருந்தது.
சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களைக் கொண்டு செல்வதற்காக ரயில்வே மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது.