2018-19 ஆம் நிதியாண்டின் பட்ஜெடை தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் காலை 10.30 மணிக்கு தொடங்கிய 1.30 மணிக்கு முடித்தது. மொத்தம் 157 நிமிடம் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக பட்ஜெட்டை குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் "ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறது அதிமுக அரச" எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில், இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் “தமிழகத்தை கடும் நிதி நெருக்கடிப் பள்ளத்தில் தள்ளியுள்ள அதிமுக அரசு மாநில முன்னேற்றத்திற்கும் - வளர்ச்சிக்கும் அபாய சங்கு ஊதியிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
அறிக்கையின் முழுவிவரம் பார்ப்போம்!!
பெரும்பான்மையை இழந்து மைனாரிட்டியாகி விட்ட அதிமுக அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்களும் இல்லை, திரவியமும் இல்லை. மாறாக நிதிப்பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, ரூ. 3.55 லட்சம் கோடி கடன் என்று, பற்றாக்குறை அரசு என பட்டப்பெயர் சூட்டிக்கொள்ளும் அளவுக்கு, எங்குப் பார்த்தாலும் “பற்றாக்குறை” தான் இந்த அறிக்கையில் இருக்கிறது. 2011-ல் இருந்து ஆட்சியிலிருக்கும் இந்த அரசு, கடந்த ஏழு வருடங்களாக நிதி நிலைமையைச் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கச் சிந்தனை இல்லாமல் போனதின் விளைவாக, தத்தளித்துத் தவிக்கிறது.
“பற்றாக்குறை” பட்ஜெட்டைப் படிப்பதும், "கடன் வாங்குவதும்”, என்பது மட்டுமே இந்த அரசின் தொலை நோக்குத்திட்டங்களாக இருப்பதால், அதிமுக அரசு அறிவித்த “ 2023-தொலைநோக்குத் திட்டம் ” தொலைந்து போய்விட்டது. உலக முதலீட்டாளர்கள் முதல் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியாமல் இருக்கின்ற நேரத்தில், உலக முதலீட்டார் இரண்டாவது மாநாடு என்பது “தேர்தல் விளம்பர” மோகத்தில் வெளியாகியிருக்கும் அறிவிப்பே தவிர, தமிழகத்தின் வளர்ச்சிக்கான முயற்சி அல்ல என்பது தெளிவாகிறது.
2017-2018 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) 15 ஆயிரத்து 930 கோடி ரூபாயாக இருந்தது. அது இப்போது 17 ஆயிரத்து 491 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) 41 ஆயிரத்து 977 கோடி ரூபாயாக இருந்தது. அது தற்போது, 44 ஆயிரத்து 481 கோடி ரூபாயாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.14 லட்சம் கோடியாக இருந்த மாநில அரசின் கடன், இப்போது 3.55 லட்சம் கோடியை எட்டும் என கூறப்பட்டுள்ளது. கணிக்கப்பட்ட எண்ணிக்கையே இந்த அளவு இருக்கும் என்றால் உண்மையில் நிதியாண்டு முடியும்போது இந்த எண்ணிக்கை நிச்சயம் இதைவிட மோசமாகத்தான் இருக்கும் என்பது எதார்த்தமான உண்மை.
அதிமுக ஆட்சியின் உபயமாக உயர்ந்து முன்னேறியிருப்பது இந்த மூன்றும்தான். கழக ஆட்சியில் 5 ஆண்டுகளையும் சேர்த்து கணக்கிட்டால் இறுதியில் சுமார் 2300 கோடி வருவாய் உபரி இருந்தது. ஆனால் 2011இல் தொடங்கிய, அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. நிதி பற்றாக்குறை 4 மடங்காக உயர்ந்து விட்டது. மாநில அரசின் கடனும் மூன்று மடங்காக அதிகரித்து விட்டது. ஆகவே, மாநில அரசின் ஒட்டுமொத்த நிதி மேலாண்மையைப் பற்றியே கவலைப்படாமல், ஒரு ஆட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து கொண்டிருக்கிறது என்றால் அது இந்தியாவிலேயே இந்த ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சிதான்!
மாநிலங்களின் நிதி நிலைமை பற்றி நிதி ஆயோக் என்று அழைக்கப்படும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை ஆய்வு நிறுவனம், சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில் 2013-2014 முதல் 2017-18 வரை,தமிழ்நாடு தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை மாநிலமாக இருக்கிறது என்று அறிவித்துள்ளதோடு, வருவாய்ப் பற்றாக்குறையில் தவித்த மாநிலங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அந்தத் தவிப்பிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு மட்டும் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறையில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வரவழியில்லாமல் தவிக்கிறது என்று சுட்டிக் காட்டியிருக்கிறது.
சென்ற நிதி நிலை அறிக்கையில் “நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம்” 2003-ன் படி,நிதிப் பற்றாக்குறை 3 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்றாலும், அது 4.58 சதவீதத்தை எட்டும் என்று சென்ற நிதி நிலை அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 2.79 சதவீதத்திற்குள்தான்- அதாவது குறைவாகத்தான் இருக்கிறது என்று காட்டுவதற்காக, “மேக் அப் மினு மினுப்பு" செய்யப்பட்டு செயற்கையாக ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ப்பட்டுள்ளது. 2006-2011 கழக ஆட்சியில் மாநிலத்தின் கடன் வெறும் 44 ஆயிரம் கோடி மட்டுமே. ஆனால் அதிமுக ஆட்சியில் வரும் நிதியாண்டில் 3.55 லட்சம் கடன் இருக்கும் என்பது, அதிமுக அரசின் நிதி மேலாண்மை படு மோசமாகி பாதாளம் நோக்கிச் சென்றுவிட்டதையே காட்டுவதாக இருக்கிறது.
தமிழக பட்ஜெட் 2018 ஓட்டை பானையில் சமையல் -ஸ்டாலின் தாக்கு
விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த எவ்வித திட்டங்களும் இல்லை. வழக்கமான “ஒப்பனை” அறிவிப்புகள் தவிர; ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவது மட்டுமே இந்த நிதி நிலை அறிக்கையின் ஒரே "சாதனை"யாக இருக்கிறது. இதற்கென 50 கோடி ரூபாயும், ஜெயலலிதாவின் இல்லத்தை வாங்க 20 கோடி ரூபாயும் செலவிடத்தயாராக இருக்கும் இந்த அரசு, தமிழகம் முழுவதும் புதிதாக தீயணைப்பு நிலையங்களை அமைக்க வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் மக்கள் பயன்பெறும் புதிய திட்டங்களோ, உட்கட்டமைப்புத் திட்டங்களோ எதுவும் தென்படவில்லை. மக்கள் மீது சுமத்தப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வைக் குறைப்பதற்கோ, மற்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
2006-2011 கழக ஆட்சியில் வருகின்ற வருவாயில் தோராயமாக 11.5% வட்டி செலுத்தினோம். ஆனால் தற்போது வருவாயில் சுமார் 18% வட்டிக்கே செலவாகிறது. மொத்தத்தில் 3.55 லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டை மூழ்க வைத்துள்ளது பற்றி 157 நிமிடங்கள் இந்த அரசின் நிதியமைச்சர் ஒரு நிதி நிலை அறிக்கையைப் படித்திருப்பதைப் பார்த்தால், உடைந்த பானையில் உலை வைக்க, திரு ஓ.பன்னீர்செல்வம் சாமர்த்தியமாக முயற்சி செய்த காட்சி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, மிக மோசமான கடன் என்று அதிமுக அரசு தமிழகத்தை கடும் நிதி நெருக்கடிப் பள்ளத்தில் தள்ளிவிட்டு, மாநில முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அபாய சங்கு ஊதியிருக்கிறது என்பதே இந்த நிதிநிலை அறிக்கையின் உரை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.