தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து!
கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் அரசியல் தலைவர்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
ரத்த நாளங்கள் முழுக்க ஒரு மனிதனுக்கு அரசியல் ஊறிப்போயிருக்கிறது என்றால், இந்த வையகத்தில், அப்படிப்பட்ட மனிதன் கருணாநிதியாகதான் இருக்க முடியும். மனிதனின் சராசரி வயது 60 வயது என்று ஆகிப்போன நிலையில், 'மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அதிசயமான செய்திகளில் ஒன்று. 90 ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்கள் மிகச் சிலர்தான்’ என்ற சமகால பொன்மொழியை செதுக்கியவருக்கு இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
தனது 13 வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்த இவர் 32 வயதில் முதன் முறையாக எம்.எல் ஏ-ஆக உருமாறியவர். இவர் இதுவரை 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், 13 முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வந்துள்ளார். தமிழ்.. வாழ்வுக்கு மூன்றெழுத்து, அந்த வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரன் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு நம்மை அழைத்திடும் அண்ணா மூன்றெழுத்து.. என்று, திமுகவின் முதல் மண்டல மாநாட்டில் கரகர குரலில் கருணாநிதி உச்சரித்த வசனம், இன்னும் ஒவ்வொரு திமுக தொண்டர்களில் நெஞ்சங்களிலும், முரசு கொட்ட வைக்கிறது. அந்த வசனமே, ஒட்டு மொத்த திமுக தொண்டர்களை மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த தமிகழத்தையும், தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அந்த தமிழ்... அவரை 95 வயது வரை, அறியாசனத்தில் அமர வைத்து அழகு பார்க்கிறது.
அரசியலில் இவருக்கு ஈடுசொல்ல, இன்னொருவர் இல்லை என்ற பெயரோடு, அரசியல் சாணக்கியன் என்ற பட்டத்தை தன் வசப்படுத்திய அரசியல் ஞானி கருணாநிதி. அன்று, நிஜ சக்தியாக இருந்த மனிதன், இன்று நிழல் சக்தியாக ஒளிர்கிறார். இதை தொடர்ந்து, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
Warmest birthday greetings to M Karunanidhi @kalaignar89 Ji. I pray for your good health and happiness
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2018
மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளுக்கு மேலாக கருணாநிதி வாழ்த்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.