Shocking: தொடங்கியது ஓமிக்ரானின் சமூகப்பரவல், துரித கதி நடவடிக்கையில் இறங்கிய நாடுகள்

பீதியைக் கிளப்பும் விதமாக, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் வைரசின் சமூக தொற்று, அதாவது சமூக பரவல் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2021, 10:17 AM IST
Shocking: தொடங்கியது ஓமிக்ரானின் சமூகப்பரவல், துரித கதி நடவடிக்கையில் இறங்கிய நாடுகள் title=

வாஷிங்டன்: கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான 'ஓமிக்ரான்' அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் ஒரே நாளில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்திருப்பதில் இருந்து இந்த மாறுபாடு எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை அறிய முடிகிறது. 

மேலும், பீதியைக் கிளப்பும் விதமாக, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் வைரசின் சமூக தொற்று, அதாவது சமூக பரவல் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. நிலைமையைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தியாவிலும், கொரோனா வைரசின் இந்த புதிய மாறுபாடு தலைகாட்டத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

15 அமெரிக்க மாநிலங்களில் பரவியது ஓமிக்ரான் 

ஓமிக்ரான் மாறுபாடு (Omicron Variant) குறைந்தது 15 மாநிலங்களுக்கு பரவியுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி தெரிவித்தார். கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மினசோட்டா, மிசோரி, நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் ஆகியவை இதில் அடங்கும். இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இன்னும் டெல்டா மாறுபாடுதான் அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதித்து வருகிறது என்று அவர் கூறினார். அமெரிக்காவில், ஒரு நாளில் சுமார் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 99.9 சதவீதம் பேர் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.

சந்தேகங்கள் உண்மையாகி வருகின்றன 

நியூயார்க் சுகாதார ஆணையர் மேரி பாசெட் கூறுகையில், 'ஓமிக்ரான் மாறுபாடு குறித்து எழுப்பப்பட்ட அச்சங்கள் உண்மையாகி வருவதை நாம் காண்கிறோம். சமூகப் பரவல் துவங்குவதை நாம் பார்த்து வருகிறோம். மற்ற நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் ஒரு நாள் முன்னதாகவே கரோனா பரிசோதனை (Corona Testing) செய்யப்பட்டு தொற்று இல்லை என்ற அறிக்கையை பெற்றிருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயமாக்கியுள்ளது./ என்றார். 

அமெரிக்கா ஏற்கனவே கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், அமெரிக்காவின் தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்ததை உலகம் கண்டது.

தொற்று எண்ணிக்கை வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில், ஓமிக்ரான் மாறுபாட்டால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரானின் சமூக பரவலை உறுதிப்படுத்திய நியூ சவுத் வேல்ஸின் தலைமை சுகாதார அதிகாரி கெர்ரி சான்ட், இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஃபைசரின் கொரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவும் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Omicron: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 21 ஆக உயர்வு 

பயணத்திற்கு நெகடிவ் ரிப்போர்ட் தேவை

பிரிட்டனைப் பற்றி பேசுகையில், ஓமிக்ரான் மாறுபாட்டால் மேலும் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது. மோசமடைந்து வரும் சூழ்நிலையை சமாளிக்க, மற்ற நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா நெகடிவ் பரிசோதனை அறிக்கைகளை வைத்திருப்பதை பிரிட்டன் மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. பயணம் தொடங்குவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் இந்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். இது தவிர, பல நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து நாடு இப்போதுதான் மீண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஓமிக்ரான் மாறுபாடும் நாட்டில் நுழைந்து விட்டது என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், தடுப்பூசி செயல்முறையும் முழு முனைப்புடன் நடந்து வருகிறது.

ஓமிக்ரானைப் பொறுத்தவரை, இந்தியாவில் சமூகப் பரவலைத் தடுப்பது  முக்கிய விஷயமாக இருக்கும். இதற்கு சர்வதேச விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் பரிசோதனை நிறிமுறைகளும் தேவை. ஏற்கனவே, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா (Maharashtra), டெல்லி ஆகிய மாநிலங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுடன் மக்களின் தனி மனித ஒழுங்கும் இங்கு மிக முக்கியமாகும். தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால், உடனடியாக பரிசோதித்துக்கொள்வதும், தொற்று பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அனைவரது கடமையாகும். மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாட்டில், இப்படிப்பட்ட பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஊத்துழைப்பும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.  

ALSO READ: மஹாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News