நேட்டோவை நம்பி தவறு செய்த உக்ரைன்! ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை என்ன?

Russia Ukraine Conflict | மிகவும் நம்பிய மேற்கத்திய நாடுகள் இனி உக்ரைனைக் காப்பாற்ற வரப்போவதில்லை என்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் உக்ரைனின் அழிவை அவர்கள் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருகின்றன. 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 25, 2022, 09:34 PM IST
  • மிகவும் நம்பிய மேற்கத்திய நாடுகள் இனி உக்ரைனைக் காப்பாற்ற வரப்போவதில்லை.
  • ஆயுதங்களை கொடுத்து ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்களையும் போராட வைப்போம்.
  • எந்த நேட்டோ நாடும் உக்ரைனுக்கு உதவ படைகளை அனுப்பவில்லை.
நேட்டோவை நம்பி தவறு செய்த உக்ரைன்! ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை என்ன? title=

ரஷ்யா-உக்ரைன் மோதல்: இரண்டாவது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உணர்ச்சிகரமான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். எங்களுடன் சேர்ந்து சண்டையிட யார் தயாராக இருக்கிறார்கள்? எங்களுக்காக நிற்க இதுவரை நான் யாரையும் பார்க்கவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள யார் தயாராக உள்ளனர்? எல்லோரும் பயப்படுகிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். இதன்மூலம் உக்ரைன் தனித்து விடப்பட்டு உள்ளது என்ற நிலையை ஜெலென்ஸ்கியின் இந்த அறிக்கையில் முழுமையாக பிரதிபலிக்கிறது.

மேலும் அவர் மிகவும் நம்பிய மேற்கத்திய நாடுகள் இனி உக்ரைனைக் காப்பாற்ற வரப்போவதில்லை என்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் உக்ரைனின் அழிவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருகின்றன. அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை வாய்மொழி கண்டிப்பு மற்றும் சில லேசான பொருளாதாரத் தடைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு உள்ளன.

முதல் நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளனர்:

முதல் நாள் சண்டையில், ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமை வரை முன்னேறியுள்ளது. இனி கியேவை முழுமையாக ரஷ்யா கைப்பற்றும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், முதல் நாள் சண்டையில் 137 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 300 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைனை காப்பாற்ற, உள்ளூர் குடிமக்களையும் போரில் சேருமாறு அங்குள்ள அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆயுதங்களை கொடுத்து ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்களையும் போராட வைப்போம் என்று அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க படைகளை களமிறக்கப் போவதில்லை:

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நேட்டோ நாடுகளிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ரஷ்யா தாக்குதல் நடத்தும் போது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் அதற்கு உதவ முன்வரும் என்றும் ராணுவ நடவடிக்கைக்கு உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் வேறு எந்த நேட்டோ நாடும் உக்ரைனுக்கு உதவ படைகளை அனுப்பவில்லை. 

மேலும் படிக்க: ரஷ்யா உக்ரைன் மோதல்: இந்தியாவின் கவலைகளுக்கான காரணங்கள்..!!

தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க படைகளை களமிறக்கப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். உக்ரைனில் நமது ராணுவம் போருக்குச் செல்லாது என்றும், நேட்டோவின் அனைத்து நாடுகளுக்கும் எங்களது ஆதரவு இருக்கும் என்றும் அவர் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். உண்மையில் உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இல்லை. இத்தகைய சூழ்நிலையில், உக்ரைனைப் பாதுகாக்க தனது படைகளை அனுப்ப 30 அமைப்புகளைக் கொண்ட நேட்டோ அமைப்புக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆனால் இதுவரை அமைதி காக்கின்றனர். கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் பிடன் கூறியுள்ளார். இதன் காரணமாக ரஷ்யாவை கட்டுப்படுத்த முடியுமா?

இதுவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்:

அமெரிக்கா-ஐரோப்பாவில் வணிகம் செய்ய இரண்டு ரஷ்ய வங்கிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. தேவைப்பட்டால், புடின் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் அமெரிக்காவில் அமைந்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்று கூறியுள்ளார். வெளிப்படையாக, இது உலகின் 11 வது பெரிய பொருளாதாரமான ரஷ்யாவை பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு கட்டுப்பாடு அல்ல. ரஷ்யாவுக்கான சிப் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தலாம் என்று செய்திகள் வந்தன. இது ரஷ்யாவுக்கு பெரிய பின்னடைவாக இருந்திருக்கும், ஆனால் அமெரிக்க இன்னும் அவ்வாறு செய்யவில்லை. உண்மையில், கோவிட்-19க்குப் பிறகு மாறிய சூழ்நிலையில், அமெரிக்காவில் பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிப்பது எளிதானது அல்ல.

5 ரஷ்ய வங்கிகள் மற்றும் அதன் மூன்று ரஷ்ய கோடீஸ்வரர்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. இதன் கீழ், ரோசியா, ஜென்பேங்க், ப்ரோம் சவ்யாஸ் வங்கி, ஐஎஸ் வங்கி, கருங்கடல் வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் அனைத்தும் ரஷ்யாவின் சிறிய வங்கிகள். அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

மேலும் படிக்க: Ukraine-Russia War: பொருளாதரத்தில் பூமரங்காக எதிரொலிக்கும் ரஷ்யாவின் தாக்குதல்

11.6 பில்லியன் டாலர் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு திட்டத்தை ஜெர்மனி தடுத்துள்ளது. ஆனால் இந்த எரிவாயு குழாய் இணைப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்த தடை ஜேர்மனியின் எரிவாயு விநியோகத்தை பாதிக்காது அல்லது ரஷ்யாவிற்கு உடனடியாக சேதம் ஏற்படாது. ஜெர்மனியும் இந்த தடையை தற்காலிகமாக விதித்துள்ளது. நார்ட் ஸ்ட்ரீம்-1 எரிவாயு குழாய் விநியோகம் நடந்து வருகிறது.

இது தவிர, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்றவை முக்கியமாக தங்கள் நாட்டில் தூதர்கள் நுழைவதை தடை செய்துள்ளன. கூடுதலாக, சில நாடுகள் ரஷ்ய மீது தங்கள் பிணைப்புகளை இறுக்கியுள்ளன. இவை இப்போது ரஷ்யா மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத பொருளாதாரத் தடைகள். மேலும் உக்ரைனை தாக்கும் போது ரஷ்யா அதிபர் புடின், "நாங்கள் அனைத்து விதமான விஷயங்களுக்கும் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருதார்.

2014-ஐ விட ரஷ்யா மிகவும் வலிமையானது:

2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, ​​அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. அந்த நேரத்தில், இந்த தடைகள் காரணமாக, ரஷ்யாவின் ஜிடிபி 2.5 சதவீதம் குறைந்தது. ஆனால் CNN இன் அறிக்கையின்படி, இப்போது தடை விதிக்கப்பட்டால் ரஷ்யாவின் GDP ஒரு சதவிகிதம் குறையும் மற்றும் SWIFT (சர்வதேச கட்டண முறை "ஸ்விஃப்ட்" என்பது சர்வதேச மட்டத்தில் பணம் செலுத்தும் முறையாகும். தற்போது இதில் 200 நாடுகள் நிதி பரிவர்த்தனைகளுக்கு "ஸ்விஃப்ட்" பயன்படுத்துகின்றன) தடை செய்யப்பட்டால், GDP 5 சதவிகிதம் குறையலாம். இருப்பினும், ஸ்விஃப்டில் ரஷ்யாவுக்கு எதிராக "கை" வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. 2014 இல் கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம், ரஷ்யா தனது வணிகத்தில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது.

மேலும் படிக்க: ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவின் வணிகத்தைப் பார்த்தால், அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு குறைந்துள்ளது. IMF அறிக்கையின்படி, ரஷ்யா 2020 இல் $ 300 பில்லியனுக்கும் மேலாக ஏற்றுமதி செய்தது மற்றும் $ 200 பில்லியனுக்கும் அதிகமான இறக்குமதி செய்துள்ளது. மேலும் இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்கு குறைந்து சீனா மற்றும் பிற நாடுகளின் பங்கு அதிகரித்துள்ளது. அதேபோன்று ரஷ்யாவின் தங்கம் மற்றும் அன்னியச் செலாவணி கையிருப்பு 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், ரஷ்யாவிடம் சுமார் 500 பில்லியன் டாலர் கையிருப்பு இருந்தது. பிப்ரவரி 2022 இல், தங்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் $630 பில்லியன் ஆக உள்ளது.

மேலும் படிக்க: விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News