ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணை வீச்சு

Last Updated : Apr 5, 2017, 11:01 AM IST
ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணை வீச்சு title=

உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. அடுத்தடுத்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதைப் போன்ற ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை வட கொரியா கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியாவின் இந்த பேரழிவுப் பாதையை இந்த உலகம் அனுமதிக்காது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின்மீது தாக்குதல் நடத்தப் போவதாக வடகொரியா மிரட்டியது. இந்த நெருக்கடியை சமாளிக்கவும் வடகொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வடகொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்கவும், அந்நாட்டுக்கு எதிராக மேலும் சில புதிய தடைகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது.

இந்த கூட்டத்தில் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு தயாரித்த அறிக்கையை பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தன. வட கொரியா மேலும் பல புதிய தடைகள் விதிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆனால், இவற்றைப் பற்றி எல்லாம் சற்றும் கவலைப்படாத வட கொரியா தற்போது மேலும் ஒரு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. 

நவீன ரகத்தை சேர்ந்த இந்த ஏவுகணையை சின்போ பகுதியில் உள்ள தளத்தில் இருந்து (ஹவாய் நேரப்படி) நேற்று காலை ஏவப்பட்ட இந்த ஏவுகணை 11.51 மணியளவில் ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக பசிபிக் கடல் பிராந்தியத்தை கண்காணித்து வரும் அமெரிக்க கடற்படையின் தலைமை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வட கொரியாவின் அண்டை மற்றும் பகை நாடான தென் கொரியாவும், ஜப்பானும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வட கொரியா நேற்று நடத்தியுள்ள இந்த ஏவுகணை பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜப்பானும் தென் கொரியாவும் கூட்டாக சேர்ந்து தங்கள் நாட்டின் மீது திடீரென்று போர் தொடுக்கும் நோக்கத்தில் தான் இந்த போர் ஒத்திகை நடத்தப்படுகிறது என்று நினைக்கும் வட கொரியா, இரு நாடுகளையும் மிரட்டும் நோக்கத்தில் இந்த ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

Trending News