ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரித் தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு லண்டன் தமிழ்ச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
லண்டன் தமிழ்ச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:- தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற நமது உறவுகளின் எழுச்சிப் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள இயலாதவர்களால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிப் போராட்டம் உலகம் கண்டிராத அளவுக்கு அமைதியாக நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுத் தடை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் நமது கலாச்சாரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கப் போராடும் உறவுகளுக்குத் துணை நிற்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.