சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் ஏராளமான வெளிநாட்டினர் தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். சேமிப்பாளர்களின் பெயர் விவரங்களை வெளியிடாமல் பாதுகாத்து வரும் இந்த வங்கிகளில் ஏராளமான இந்தியர்களும் பல கோடி பணத்தை சேமித்து வைத்துள்ளனர்.
எனினும் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2018-ஆம் ஆண்டில் அந்நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு 955 மில்லியன் சுவிஸ் பிராங் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,757 கோடி) ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 6% குறைந்து உள்ளது. மேலும் இது கடந்த 1995-ஆம் ஆண்டுக்குப்பின் 2-வது மிகப்பெரிய சரிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியர்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் சேமிக்கும் பணம் இதில் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் சேமிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தானியர்களின் பணமும் 3-ல் ஒரு பங்கு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணமாக 744 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.5,300 கோடி) மட்டுமே கடந்த ஆண்டில் இருந்தது தெரியவந்துள்ளது.