உலக மக்களை உலுக்கிய நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு அடுத்து, அங்கு பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது!
நியூஸிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச் பகுதியில் சமீபத்தில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அங்கு பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க நியூஸிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.
நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்கிக்கொள்ள முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
அதே சமயம் எந்த மாதிரியான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த கட்டுப்பாடுகள் மற்றும் குற்றவாளி தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்., பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச்சூடு வீடியோவை சமூக வலைத்தளங்களில் நேரலையில் பரப்பிய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, துப்பாக்கிச்சூடு வீடியோவை பரப்பியது மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான வாசகங்களுடன் பள்ளிவாசலின் புகைப்படங்களை வெளியிட்டது என 2 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த வழக்கில் அந்த வாலிபருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, அடுத்த மாதம் 8-ஆம் தேதி மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக அண்டை நாடான ஆஸ்திரேலியாவில் உள்ள புனித தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மத போதனை தளங்களிலும், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிலும் அதிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 55 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.