இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரம சிங்கே அதிரடி நீக்கம்; புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றார்!
இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர் ராஜபக்சே. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சிறிசேனா பதவி விலகி, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அதிக இடங்களில் வெற்றியடைந்தது.
Former #SriLanka President Mahinda Rajapaksa sworn in as new Prime Minister. pic.twitter.com/cveo0PuUF7
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) October 26, 2018
இதனையடுத்து 2015-ஆம் ஆண்டு ஒற்றுமை அரசு என்னும் பெயரில் சிறி சேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி அரசு அமைத்தன. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றியடைந்தது.
உள்ளாட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு சிறிசேனா கோரியதை ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. பின்னர், கண்டி மாவட்டத்தில், புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பிரதமர் ரனிலிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு துறையை பறித்து அதிபர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், ரனில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவரப்பட்டது.
மேலும், அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த சதித்திட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அதிபர் சிறிசேனா கடந்த வாரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணியில் விரிசல் அதிகரித்தது. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் நேற்று இலங்கை கூட்டணி அரசில் இருந்து சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கட்சி விலகுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை சிறிசேனா நீக்கி, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார்.
அறிவிப்பினை அடுத்து அவசரஅவசரமாக அதிபர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ரனில் விக்ரமசிங்கே தெரிவிக்கையில்... ராஜபக்சே நியமனத்தில் பல அரசியல் சிக்கல்கள் உள்ளது எனவும் தானே பிரதமராக நீடிப்பேன் எனவும் தெரவித்துள்ளார்.