ஐபிஎல் 2024: தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

IPL 2024 Opening Ceremony: நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் சென்னையில், வரும் 22ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். 

IPL 2024 Opening Ceremony: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை கவுன்டரில் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. தோனி - விராட் கோலி என ஒரு போட்டியில் இரண்டு பேர்களை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தோனி தற்போதே பயிற்சியை தொடங்கிவிட்டாலும் விராட் கோலி இந்த சீசனின் முதற்கட்ட போட்டிகளில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரிலேயே விராட் கோலி விளையாடாமல் அதில் இருந்து விலகியிருந்தார். குறிப்பாக, அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. எனவே, டெஸ்ட் தொடரை போலவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகலாம் என கூறப்படுகிறது. மேலும், அவர் டி20 உலகக் கோப்பையின் இந்திய அணி ஸ்குவாடில் இடம்பிடிக்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, சென்னை - ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

Trending News