ஜியோ போன் அறிவிப்பின் காரணமாக மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்நிலையில் குறைந்த விலை போன்களைத் தயாரிக்க செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து வருவதாக ஐடியா நிறுவனம் நேற்று கூறியுள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் ரூ.1000-த்துக்கு 4ஜி போன் தயாரிக்கும் யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஐடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறியது:-
ஜியோ போட்டியை சமாளிப்பதற்கான நடைமுறை தீர்வுகளை யோசிக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த வேலைகளைத் தொடங்கியுள்ளோம்.
ஜியோ அறிவித்துள்ள போன் போட்டியை சமாளிக்கும் விதமாக, மக்கள் குறைந்த விலை ஸ்மார்ட்போனை வாங்குவது போல இருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.2,500 க்குள் இருக்க வேண்டும்.
ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம் அறிவித்துள்ள குறைந்த விலை போன் என்கிற சவாலை சமாளிக்க செல்போன் தயாரிப்பாளர்களோடு இணைந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சந்தையில் குறைந்த விலை போனை அறிமுகப்படுத்த செல்போன் தயாரிப்பாளர்களோடு சேர்ந்து பணியாற்றும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை போனை கொடுக்க முடியும்.
இரண்டு சிம் கார்டு, 2ஜி மற்றும் 4ஜி வசதி, தொலைத் தொடர்பு நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகளைக் கொண்ட செல்போன்களை குறைந்த விலைக்கு தயாரிக்க வேண்டும். சந்தை ஆய்வுகள்படி பியூச்சர் போன் வாங்குவது குறைந்துள்ளது. இதனால் தொடுதிரை உள்ளிட்ட வசதி கொண்ட போனாகவும் இருக்க வேண்டும்.
4 ஜி பியூச்சர் போனை ஜியோ அறிமுகம் செய்துள்ளதன் மூலம், ஏற்கெனவே உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டும் இழப்பு ஏற்படப் போவதில்லை. செல்போன் தயாரிப்பாளர்களுக்கும் மிக பெரிய பாதிப்பு உருவாகும்.
2ஜி போன் தயாரிப்பு சந்தை முற்றாக அழிந்துவிடும். இந்த கருத்தை செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியாக நம்பவில்லையெனில் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்தும் அவர்கள் உதவியை பெற முடியாது.
மானிய விலையிலான போன் தயாரிப்பது எங்களுக்கு நோக்கமில்லை. செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தொலைதொடர்பு நிறுவனங்களும் இணைந்து நுகர்வோருக்கு குறைந்த விலையிலான போனை அளிக்க வேண்டும். அதிகப்படியான வசதிகள் கொண்ட போன்களுக்கு அதிக ஆபர்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களும் அதிகமாக வாங்குவர்.
தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு உதவி செய்வார்கள். ஆனால் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் லாபத்தில் நெருக்கடி உருவாகும். ஆனால் இதன் மூலம் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். தொலைதொடர்பு நிறுவனங்களும் செல்போன் விற்பனையுடன் இணைந்த திட்டங்களை அறிவிப்பதன் மூலம் நீண்ட கால நோக்கில் வாடிக்கையாளர்களிடமிருந்து சராசரி வருவாய் பெற முடியும்.
நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டவர் மூலமான சொத்துகளை கண்காணித்து வருகிறோம். இண்டஸ் டவர் ஐபிஓ வருவதற்கான முயற்சியிலும் உள்ளோம் என்று அவர் கூறினார்.